சென்னை துறைமுக தலைவர் பதவிக்கான நேர்முக தேர்வு முடிவை வெளியிட தடை; ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை காமராஜர் துறைமுகத்தில் துணை தலைவராக பதவி வகிப்பவர் சிரில் சி.ஜார்ஜ்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சென்னை துறைமுக தலைவர் பதவியிடம் காலியாக உள்ளது. இப்பணியிடத்தை நிரப்புவதற்கு கடந்த பிப்ரவரி 2–ந் தேதி மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டது. அதனடிப்படையில் இப்பதவிக்குரிய அனைத்து தகுதிகளும் எனக்கு உள்ளது என்பதால் முறையாக துறைச் செயலாளர் வழியாக நான் அப்பதவிக்கு விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் துறைமுக தலைவர் பதவிக்கு மற்றொரு அறிவிப்பை மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பிற துறைமுகங்களில் பணிபுரியும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது. முறையாக விண்ணப்பித்த என்னை நேர்முகத் தேர்வுக்கு அழைக்காமல், புதிய அறிவிப்பின் அடிப்படையில், நேர்முகத்தேர்வை நடத்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, ‘சென்னை காமராஜர் துறைமுக தலைவர் பதவிக்கான நேர்முகத் தேர்வை மத்திய அரசு நடத்திக் கொள்ளலாம். ஆனால் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை முடிவுகளை வெளியிடக்கூடாது’ என தடை விதித்து உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 15–ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.