சொத்து வரி செலுத்தாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் 729 கடைகளுக்கு சீல்
சொத்து வரியை செலுத்தாத கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள 729 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைக்க சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை சொத்து வரியை உயர்த்த வேண்டிய சென்னை மாநகராட்சி, கடந்த 1998–ம் ஆண்டுக்கு பின்னர் உயர்த்தாமல் இருப்பதும், இதனால் அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதும் நீதிபதிக்கு தெரியவந்தது. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையரை நேரில் அழைத்து நீதிபதி கிருபாகரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மக்களின் அதிருப்தியை பெற்றுவிடக்கூடாது என்பதற்காக ஆட்சியாளர்கள் பல ஆண்டுகளாக சொத்து வரியை உயர்த்தாமல் இருந்துள்ளனர். இதை மாநகராட்சி உயர் அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர் என்று அப்போது நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி சார்பில் ஆஜரான அரசு கூடுதல் வக்கீல் பி.வி.செல்வகுமார், ‘கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தம் 2,325 கடைகள் உள்ளன. அதில், 1,566 கடைகளுக்கு ரூ.2 கோடியே 95 லட்சத்து 39 ஆயிரத்து 481–யை சொத்து வரியாக கடந்த ஏப்ரல் 27–ந் தேதிக்கு முன்பாக அதன் உரிமையாளர்கள் செலுத்திவிட்டனர்.
30 கடைகளின் உரிமையாளர்கள் ரூ.13 லட்சத்து 33 ஆயிரத்து 866–யை சொத்து வரியாக கடந்த ஜூன் 29–ந் தேதிக்கு முன்பாக செலுத்திவிட்டனர். மீதமுள்ள 729 கடைகளின் உரிமையாளர்கள், சொத்து வரியை இதுவரை செலுத்தவில்லை. இவர்கள், சொத்து வரியாக ரூ.2 கோடியே 48 லட்சத்து 23 ஆயிரத்து 891–யை செலுத்தவேண்டும். அவர்கள் வரியை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர்’ என்று கூறினார்.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–மாநகராட்சி விதிகளின்படி, 4 ஆண்டுக்கு ஒரு முறை சொத்து வரியை உயர்த்தவேண்டும். அதை அதிகாரிகள் செய்யவில்லை. கடைசியாக 1998–ம் ஆண்டு சொத்து வரியை உயர்த்தியுள்ளனர்.
அரசியல் லாபத்துக்காக மாநகராட்சியில் உயர்ந்த பதவியில் (மேயராக) இருந்தவர்களும், உயர் அதிகாரிகளும் சொத்து வரியை உயர்த்தாமல் இருந்துள்ளனர். அப்படி சொத்து வரியை உயர்த்தாமல் இருந்தும் கூட, இந்த 729 கடைகளின் உரிமையாளர்கள் வரியை செலுத்தாமல் உள்ளனர். எனவே, இந்த சூழ்நிலையில், இந்த 729 கடைகளையும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்து இழுத்து மூடவேண்டும்.
அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, அவர்களுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் வழங்கவேண்டும். இதற்காக அவரையும், இந்த வழக்கில் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கிறேன். இந்த கடைகளுக்கு ‘சீல்’ வைத்துவிட்டு, அது தொடர்பான அறிக்கையை 20–ந் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.