தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு வழங்கப்பட்ட 85 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
புதுடெல்லி,
மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு வழங்கப்பட்ட 85 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஜூன் 22–ந் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, 85 சதவீத உள்ஒதுக்கீடு மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துவதாக கூறி, அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.இதை எதிர்த்து தமிழக அரசும், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலரும், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் நூட்டி.ராமமோகனராவ், எம்.தண்டபாணி ஆகியோர் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, அனைத்து மாணவர்களையும் சமமாக பாவிக்கவில்லை என்று கூறி மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த ஜூலை 31–ந் தேதி உத்தரவிட்டனர்.
சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்தும், 85 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 4–ந் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
மாநில பாட திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்தது மாநில அரசின் கொள்கை சார்ந்த நடவடிக்கை ஆகும். இதுபோன்ற மாநில அரசின் நடவடிக்கைகளில் கோர்ட்டு தலையிடுவது அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும். மேலும் மாநில அரசின் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளில் ஐகோர்ட்டு தலையிட முடியாது.
மாநில பாட திட்டம் மற்றும் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் உள்ள வேறுபாடுகளை கருத்தில் கொள்ளாமல் ஐகோர்ட்டு உள்ஒதுக்கீட்டுக்கு தடை விதித்து இருக்கிறது. இரு பாடதிட்டங்களிலும் பயின்ற மாணவர்களை சமமாக கருதி சேர்க்கையை நடத்துவது சரியானதாக இருக்காது. மாநில பாட திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கும் வாய்ப்பை வழங்குவது ஒரு மாநில அரசின் கடமை ஆகும்.எனவே, மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்ற வகையில், சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது,