மத்திய பா.ஜ.க. அரசு நீட் விலக்கு மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற்று தர வேண்டும்


மத்திய பா.ஜ.க. அரசு நீட் விலக்கு மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற்று தர வேண்டும்
x
தினத்தந்தி 13 Aug 2017 9:13 PM GMT (Updated: 13 Aug 2017 9:13 PM GMT)

மத்திய பா.ஜ.க. அரசுக்கு தமிழக மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் நீட் விலக்கு மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற்று தர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘நீட்’ தேர்வு பிரச்சினை முடிந்து போன ஒன்று’ என மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மாநில பாடத்திட்டத்தில் படித்த 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு நிவாரணம் கிடைக்காதா? என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மக்களவைத் துணைத் தலைவர் இப்படி அறிவித்திருப்பது, இதுவரை மாநிலத்தில் உள்ள ‘குதிரை பேர’ அ.தி.மு.க. அரசும், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும் நீட் பிரச்சினைக்குத் தீர்வு காணுவோம் என்று கூறி வந்தது வெறும் ஏமாற்று நாடகம் என்பது நிரூபணமாகி விட்டது.

நீட் தேர்வு பிரச்சினை முடிந்து போன ஒன்று என்று அறிவித்திருக்கும் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை உள்ளிட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் தோல்வியை ஒப்புகொண்டு ராஜினாமா செய்து விட்டு, முதல்–அமைச்சருடன் சேர்ந்து தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும்.

உள்ளபடியே மத்திய பா.ஜ.க. அரசுக்கு தமிழக மாணவர்கள் மீது அக்கறை இருக்குமென்றால், நீட் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய இரு மசோதாக்களுக்கும் உடனடியாக ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Next Story