சேகர் ரெட்டி வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்
சேகர் ரெட்டி மீதான வழக்கின் விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கிவைத்தது குறித்து சி.பி.ஐ. தனியாக வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் சீனிவாசலு, பிரேம்குமார், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்தநிலையில் தங்கள் மீது சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில் சேகர் ரெட்டி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். அதில், ‘ஒரே குற்றச்சாட்டுக்காக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளன. ஒரு குற்றச்சாட்டுக்கு பல வழக்குகள் பதிவு செய்யமுடியாது. எனவே சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கை ரத்துசெய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தன. மனுதாரர் தரப்பு வக்கீல், ‘இந்த வழக்கு பதிவுசெய்து 10 மாதங்கள் ஆகியும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை முடிக்காமல் உள்ளனர். மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அவர்களால் விசாரணை மேற்கொள்ள முடியவில்லை’ என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை விவரங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் வருகிற 25–ந்தேதி அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 6–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’’ என்று உத்தரவிட்டார்.