போயஸ் கார்டன் வீட்டுக்கு உரிமை கோரும் ஜெ.தீபா மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


போயஸ் கார்டன் வீட்டுக்கு உரிமை கோரும் ஜெ.தீபா மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 Oct 2017 3:45 AM IST (Updated: 9 Oct 2017 11:07 PM IST)
t-max-icont-min-icon

சென்னை போயஸ் கார்டன் வீட்டுக்கு உரிமை கோரும் ஜெ.தீபா மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

என் தந்தை வழி பாட்டி வேதவல்லி என்கிற சந்தியா வாங்கிய சொத்துகளில் சென்னை போயஸ் கார்டனில் ‘வேதா நிலையம்’ என்ற பெயரில் உள்ள வீடும் ஒன்று. அந்த வீட்டில் என் தந்தை ஜெயக்குமார், தாயார் விஜயலட்சுமி, அத்தை ஜெயலலிதா, நான், என் தம்பி தீபக் ஆகியோர் பாட்டி சந்தியாவுடன் கூட்டு குடும்பமாக வசித்துவந்தோம்.

பின்னர் எங்கள் குடும்பம் தியாகராயநகரில் குடியேறியதால், அத்தை ஜெயலலிதா மட்டும் போயஸ் கார்டன் வீட்டில் தனியாக வசித்துவந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 5–ந்தேதி உடல்நிலை பாதிப்பு காரணமாக ஜெயலலிதா இறந்துவிட்டார். முதல்–அமைச்சராக பதவி வகித்த அவரது வீட்டை, நினைவு இல்லமாக மாற்றப்போவதாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆகஸ்டு 18–ந்தேதி அறிவித்தார்.

இதை எதிர்த்து ஆகஸ்டு 24–ந்தேதி தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் கொடுத்தோம். அதில் ‘தனியார் சொத்துகளை நினைவு இல்லமாக மாற்றும் அதிகாரம் அரசுக்கு இல்லை. என் அத்தையின் சொத்துக்கு நானும், தீபக்கும் தான் வாரிசுகள். எனவே போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள கூடாது’ என்று குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் முதல்–அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து வருவாய் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் போயஸ் கார்டன் வீட்டை அளவீடு செய்து நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும். எங்களது அத்தை, தன் பெயரில் உள்ள சொத்துகள் குறித்து உயில் எதுவும் எழுதிவைக்கவில்லை. எனவே இச்சொத்துகளுக்கு வாரிசான எனது மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் ஜெ.தீபா கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தமிழக தலைமை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் வருகிற 23–ந்தேதிக்குள் இந்த மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். விசாரணையையும் அதே தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story