கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க என்ன நடவடிக்கை? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் என்பவர் 2018-ம் ஆண்டு டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கவும், இந்த காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ். கொசுவை ஒழிக்கவும், சுகாதாரமின்றி இருக்கும் வீடுகளுக்கு அபராதம் விதிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல், ‘டெங்கு பரவாமல் தடுக்க 2,075 பேர் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தினமும் 80 வீடுகள் வரை ஆய்வு செய்யப்படுகிறது’ என்றார்.
அப்போது மனுதாரர் சார்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமின்றி தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பற்றித்தான் உலகமே பேசிக்கொண்டிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் இந்த வைரஸ் யாரையும் தாக்கவில்லை. இருந்தாலும், இந்த வைரஸ் குறித்து பொதுமக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்குவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து விரிவான பதில் மனுவை 2 வாரத்துக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story