கோவில் திருவிழா கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் - வைகோ வலியுறுத்தல்


கோவில் திருவிழா கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Feb 2020 9:00 PM GMT (Updated: 18 Feb 2020 6:27 PM GMT)

கோவில் திருவிழாக்கள் நடத்துவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் கோடிக்கணக்கான மக்கள் மாசி, பங்குனி மாதங்களில் தங்களின் குலதெய்வ வழிபாடுகளை திருவிழாக்களாக பல நூறு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். அதேபோல வெவ்வேறு மாதங்களில் அம்மன் கோவில் கொடை விழாக்களும் அமைதியான முறையில் நடந்து வருகின்றன. இதுபோன்ற திருவிழாக்களில்தான் ஒன்று கூடி உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் அளவளாவி மகிழ்கின்ற வாய்ப்பினை பெறுகின்றனர்.

இத்தகைய கோவில் திருவிழாக்களையொட்டி, கிராமங்களில் அறிவார்ந்த பட்டிமன்றங்கள், சமய சொற்பொழிவுகள், இசைக் கச்சேரிகள், வில்லிசை என பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளை தங்களது ஊரின் நிதி ஆதாரங்களுக்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்து நடத்துகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் முன்பு, இரவு 9 மணிக்கு மேல் தொடங்கி அதிகாலை 5 மணி வரை நடப்பது வழக்கம். இந்த திருவிழாக்களில் மைய நிகழ்ச்சியாக விளங்கும் சாமக்கொடை என்ற இறை வழிபாட்டு சடங்குகள், இப்போதும் நள்ளிரவில்தான் நடத்தப் படுகின்றன.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இரவு 10 மணிக்கு மேல் கோவில் விழாக்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என காவல்துறை சார்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதைவிட கொடுமை கோவில் விழாக்களுக்கு அனுமதி பெறுவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்களுக்கு ஒருவார காலத்திற்கு நடையாய் நடந்து திரிவதும், விழாவுக்கு காவலர்கள் பாதுகாப்புக்கு வர, காவல்துறை நிர்ணயிக்கும் கட்டணத்தை வங்கி கிளைகளில் செலுத்தி அதன் ரசீதுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்து அனுமதிபெற வேண்டும் என்ற விதிமுறைகளும் பெரும் சிரமங்களையும், கடுமையான மன உளைச்சலையும் விழா ஏற்பாட்டாளர்களுக்கு தருகின்றன.

இதனால் பல கிராமங்களில் திருவிழா ஏற்பாடுகளை செய்வதில் கூட சுணக்கம் ஏற்படுகிறது. எனவே திருவிழாக்களுக்கு ‘மக்களின் நண்பன்’ என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் காவல்துறை தாமாகவே பங்கேற்று பாதுகாப்பு அளித்திட முன்வரவேண்டுமே அன்றி, கட்டணம் வசூலிப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.

இந்த பிரச்சினையில் நீதிமன்றத்தில் ஏதேனும் தடை ஆணைகள் இருந்தால் தமிழக அரசு மக்களின் உணர்வுகளை நேரடியாக அறிந்து மேல்முறையீடு செய்து கோவில் திருவிழாக்கள் நள்ளிரவு வரை நடைபெற தக்க அனுமதி பெற நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒலிபெருக்கி பயன்படுத்தி கொள்ளும் நேரத்தை இரவு 10 மணி வரை என்பதை குறைந்தபட்சம் அதிகாலை 2 மணி வரை என்ற வகையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை சென்று காவல்துறை அனுமதி பெறவேண்டும் என்பதை அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளர் நிலையிலேயே அனுமதி வழங்கிடும் வகையிலும் நிபந்தனைகளை தளர்த்திட முன்வரவேண்டும். மேலும் காவல்துறை பாதுகாப்புக்கு கட்டணம் செலுத்தும் நடை முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story