அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
சென்னை,
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் பரபரப்புக்கு மத்தியில், அடுத்த ஆண்டு (மே மாதம்) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பரபரப்பும் தற்போது தொற்றி கொண்டுள்ளது. தேர்தல் களத்தை சந்திப்பதற்கான ஆயத்தப்பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் இல்லாமல் அ.தி.மு.க. முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. எனவே அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்த இந்த விவகாரம் அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த மாதம் 17-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டத்திலும், கடந்த மாதம் 28-ந் தேதி நடந்த செயற்குழு கூட்டத்திலும் முதல்-அமைச்சர் வேட்பாளர் விவகாரம் காரசார விவாத பொருளானது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து முடிந்த செயற்குழு கூட்டத்தின் முடிவில், ‘அக்டோபர் 7-ந் தேதி (அதாவது நேற்று) அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும்’ என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் வேட்பாளர், 11 பேர் அடங்கிய கட்சி வழிக்காட்டுதல் குழு விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடனும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடனும் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே கடந்த 3 தினங்களுக்கு முன்பு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ‘பகவத் கீதை’யில் உள்ள வாசகத்தை சுட்டிகாட்டி, ‘தமிழக மக்கள் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!’ என்று கருத்து பதிவிட்டார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் மற்றும் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை முடிவு செய்வதற்கான இறுதிக்கட்ட முயற்சியில் அமைச்சர்களும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் நேற்று முன்தினம் தீவிரம் காட்டினர். அவர்கள் சென்னை கிரின்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கும் மாறி, மாறி படையெடுத்தனர். நேற்று முன்தினம் காலையில் தொடங்கிய பேச்சுவார்த்தை நேற்று அதிகாலை 3.15 மணி அளவில் சுமுக முடிவுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று அதிகாலை முதலே தொண்டர்கள் குவிய தொடங்கினர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் காலை 9.35 மணிக்கு கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்தார். அவரை அவரது ஆதரவாளர்கள் பூக்களை தூவி வரவேற்றனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை வணங்கிவிட்டு உள்ளே சென்றார்.
9.38 மணிக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அவரை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர். ‘நிரந்தர முதல்வரே..., மாணவர்களின் முதல்வரே...,’ என்று வாழ்த்துகோஷம் எழுப்பினர். அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்தனர்.
பின்னர் அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்ற அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பார் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
நம்முடைய திராவிட இயக்கத்தில் தமிழக மக்களில் ஒரு சாமானியனும், உயர் பதவிக்கு வரமுடியும் என்கிற சரித்திர சகாப்தத்தை படைத்த அண்ணா, இந்த இயக்கம் மக்களின் இயக்கமாக இருக்கவேண்டும் என்று புரட்சியை ஏற்படுத்திய எம்.ஜி.ஆர்., அவருடைய வழிகாட்டுதலின்படி 3 முறை தொடர்ந்து வரலாற்று வெற்றி பெற்று நல்ல பல திட்டங்களை தந்தார்.
அவருடைய மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவும் 30 ஆண்டுகளாக கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப் பேற்று இயக்கத்துக்கு வந்த வேதனைகள், சோதனைகள் எல்லாவற்றையும் தாங்கி, எம்.ஜி.ஆர். என்ன நோக்கத்துக்காக கட்சியை உருவாக்கினாரோ? அதற்கு ஒரு சிறு குண்டுமணி அளவு கூட சேதம் ஏற்படாத வகையில், யாராலும் வெல்ல முடியாத மாபெரும் இயக்கமாக அ.தி.மு.க.வை உச்சநிலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
ஆட்சியும், கட்சியும் தொண்டர்கள் கையில்தான் இருக்கவேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் கனவு நனவாகி கொண்டு இருக்கிறது. அந்த கனவை தொண்டர்களை முன்னிறுத்தி கட்சியையும், ஆட்சியையும் வெகு சிறப்பாக நாம் செயலாற்றிக்கொண்டு இருக்கிறோம். ஆட்சிக்கும், கட்சிக்கும் முழு ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிற நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் (ஓ.பன்னீர்செல்வம்), இணை ஒருங்கிணைப்பாளர் (எடப்பாடி பழனிசாமி), துணை ஒருங்கிணைப்பாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களால் அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் வெற்றி வேட்பாளராக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்துவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதனை நான் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது அங்கு கூடி நின்ற அமைச்சர்கள், நிர்வாகிகள் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, எடப்பாடி பழனிசாமிக்கு பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதன் பின்னர் இந்த அறிவிப்புக்கான உடன்பாடு ஒப்பந்தத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கையெழுத்திட்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கட்சி அலுவலகத்தில் தனியாக 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலையை வணங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Related Tags :
Next Story