வாக்குப்பதிவுக்கான நடைமுறைகள் குறித்து ஆலோசித்து முடிவு: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்
தேர்தல் காலத்தில் கொரோனா பாதிப்பு இருந்தால், வாக்குப்பதிவுக்கான நடைமுறைகள் பற்றி ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
சென்னை,
தமிழகத்தில் தேர்தல் காலத்தில் கொரோனா பாதிப்பு இருந்தால், வாக்குப்பதிவுக்கான நடைமுறைகள் பற்றி ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி. எச்.வசந்தகுமார் உடல்நலக்குறைவால் சமீபத்தில் காலமானார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி அந்த தொகுதிக்கு பிப்ரவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள் மற்றும் மின்னணு வாக்கு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
கொரோனா பாதிப்பு இருந்தாலும் பீகாரில் சில நடைமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்குச்சாவடிகளுக்கான வாக்காளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. வயதானவர்களுக்கு தபால் ஓட்டுகள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் வரை கொரோனா பாதிப்பு இருக்கும்பட்சத்தில் இங்குள்ள நிலைமைக்கு ஏற்றபடி நடைமுறைகள் வகுப்பது பற்றி ஆலோசித்து முடிவு செய்யப்படும். இங்கு சட்டமன்ற தேர்தலின்போது கொரோனா நீடித்தால், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது தமிழகத்தில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 3 சதவீதம் பேர் இருக்கின்றனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 16-ந் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் நவம்பர் 3-ந் தேதி நடைபெறுகிறது.
அதற்கு முன்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனான (மாவட்ட கலெக்டர்கள்) ஆலோசனை கூட்டம் அடுத்த வாரம் நடத்தப்படவுள்ளது.
தமிழக வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 14-ந் தேதியில் இருந்து அக்டோபர் 13-ந் தேதிவரை (நேற்று முன்தினம்) 7 லட்சத்து 67 ஆயிரத்து 621 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அவற்றில் 3.58 லட்சம் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாகவும், 4.09 லட்சம் விண்ணப்பங்கள் நேரடியாகவும் பெறப்பட்டன. பெயர் சேர்ப்புக்காக மட்டும் 2 லட்சத்து 12 ஆயிரத்து 89 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இறந்தவர் பெயர் நீக்கம் மற்றும் வாக்காளர் ஒருவரின் பெயர் ஒன்றிற்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தால் அவற்றையும் நீக்குவதற்காக 3.68 லட்சம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. திருத்தங்களுக்காக 1.59 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story