நெல்லையில் 2 கொரோனா சிகிச்சை மையங்கள் - காணொலி மூலம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

நெல்லையில் 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதல்-அமைச்சர் ஸ்டாலின், பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்களை திறந்து வைத்து வருகிறார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் இன்று இரண்டு இடங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 320 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள குமாரபுரத்தில், புனித அந்தோணியார் கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 140 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் மற்றும் தெற்கு வள்ளியூரில் உள்ள யுனிவர்சல் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 180 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது சென்னையில் தலைமைச் செயலாளர் இறையண்பு, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் நெல்லையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கொரோனா சிகிச்சை மையங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் அருகில் உள்ள திசையன்விளை மற்றும் வடக்கன்குளம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வள்ளியூர் மற்றும் ராதாபுரம் வட்டார மக்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே சிகிச்சை பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story






