பழையவற்றை ஒதுக்கிவிட்டு புதிதாக 2 ஆயிரம் பஸ்களை இயக்க திட்டம் உயர் அதிகாரிகள் தகவல்


பழையவற்றை ஒதுக்கிவிட்டு புதிதாக 2 ஆயிரம் பஸ்களை இயக்க திட்டம் உயர் அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 9 July 2021 12:22 AM GMT (Updated: 9 July 2021 12:22 AM GMT)

அரசு போக்குவரத்து கழகத்தை சீரமைக்கும் நடவடிக்கையாக ஆயுட்காலம் நிறைவடைந்து ஓடி கொண்டிருக்கும் 2 ஆயிரம் பழைய அரசு பஸ்களை ஒதுக்கிவிட்டு புதிதாக 2 ஆயிரம் பஸ்களை வாங்கி பயன்படுத்த போக்குவரத்து துறை திட்டமிட்டு உள்ளது.

சென்னை,

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தை சீரமைப்பதற்காக ஆயுட் காலம் நிறைவடைந்து பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கும் பழைய அரசு பஸ்களை மாற்றிவிட்டு அதற்கு பதிலாக புதிய பஸ்களை வாங்கி இயக்குவது, போக்குவரத்து கழகத்தில் ஏற்பட்டுள்ள நட்டத்தை குறைப்பது, பணியாளர்கள் நலனில் அக்கறை செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

அதனடிப்படையில் சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் சேர்ப்பதற்கான புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

புதிய வழித்தடங்கள்

பொதுமக்கள் நலன் கருதி மாநிலம் முழுவதும், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு புதிய வழித்தடங்களை ஏற்படுத்த கேட்டு கொண்டு உள்ளனர். அந்த வழித்தடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த வழித்தடங்களிலும் பஸ்கள் இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், மாவட்டங்களில் பணிமனைகள் குறைவாக இருப்பதால் பஸ்களை பராமரிப்பதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. புதிய பணிமனைகளும் அமைத்து பொதுமக்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள வகையில் விரைவான சேவை அளிக்கப்பட உள்ளது.

2 ஆயிரம் புதிய பஸ்கள்

அரசு பஸ்களை பொறுத்தவரையில் ஒரு பஸ் இயக்கப்பட்டு 6 லட்சம் கிலோ மீட்டர் அல்லது 7 ஆண்டுகள் இதில் எது முதலில் வருகிறதோ அதனடிப்படையில் அந்த பஸ் பணியிலிருந்து விடுவிக்கப்படும். அந்தவகையி்ல் தற்போது ஆயுட்காலத்தையும் தாண்டி சில பஸ்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றன. அவற்றை நீக்கி விட்டு புதிய பஸ்களை வாங்கி பயணிகளுக்கு தரமான சேவை அளிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

அதனடிப்படையில் முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் பஸ்களை பணியிலிருந்து விடுவித்து விட்டு அந்த வழித்தடங்களில் 2 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் உள்ள 19 ஆயிரத்து 700 பஸ்களில் முதல்-அமைச்சர் அறிவித்த அறிவிப்புக்கு இணங்க பெண்களுக்காக 7 ஆயிரத்து 500 பஸ்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்களை இயக்கவும் போக்கு வரத்து கழகம் தயார் நிலையில் உள்ளது.

மின்சார பஸ்கள்

அத்துடன், தலா ரூ2 கோடி மதிப்பில் பேட்டரியில் இயங்கும் நூறு மின்சார பஸ்கள் வாங்கப்பட உள்ளது. பசுமை பஸ்கள் என்று அழைக்கப்படும் இந்த வகை பஸ்களால் சுற்றுப்புறசூழல் மாசு ஏற்படுவது நூறு சதவீதம் தடுக்கப்படுகிறது. இந்த பஸ்களை பராமரிக்க சென்னை மாநகரில் உள்ள 33 பணிமனைகளிலும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக பஸ்களில் உள்ள பேட்டரிகள் தினசரி ரீசார்ஜ் செய்வதற்கான கருவிகளும் பொறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட தகவல்களை போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story