இடைத்தரகர்கள் இன்றி நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


இடைத்தரகர்கள் இன்றி நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 July 2021 3:20 AM GMT (Updated: 2021-07-09T08:50:09+05:30)

இடைத்தரகர்கள் இன்றி நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 6-ந்தேதி மாலை திருவாரூர் செல்லும் வழியில், மன்னார்குடி அருகே செருமங்கலம் என்ற நேரடி கொள்முதல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளார். அங்கு நெல் விற்பனை செய்ய வந்த விவசாயிகளிடமும், சுமை தூக்கும் தொழிலாளர்களிடமும் அவர்களின் குறைகளை கேட்டறிந்ததாக செய்திகள் வந்தன.

அதே நேரம், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள், ஆளும் கட்சியினர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி தாங்கள் டோக்கன் கொடுக்கும் விவசாயிகளிடம் மட்டும்தான் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளை மிரட்டுவதாக செய்திகள் வருகின்றன. மேலும், தங்களுக்கு கமிஷன் கொடுக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே டோக்கன்களை வழங்குவதாகவும் விவசாயிகள், அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலை

குறிப்பாக, திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் பகுதிகளில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த நெல்லை கொள்முதல் செய்ய தங்கநகர், பி.மேட்டூர், வைரிசெட்டிபாளையம், எரகுடி வடக்கு மற்றும் ஆலத்துடையான்பட்டி ஆகிய 5 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்துள்ளது.

இங்கு பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டுவந்துள்ள நிலையில், ஆளும் கட்சியினரின் தலையீடு காரணமாக நாள் ஒன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக பாதிக்கப்படும் விவசாயிகள் கூறுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்துள்ள நெல் மூட்டைகளுடன் நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.

இடைத்தரகர்கள்

இதற்கிடையில், சமீபத்திய மழையினால் பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி உள்ளதாகவும், குறிப்பாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள 5 நெல் கொள்முதல் நிலையங்களில், சமீபத்திய மழையினால் கொள்முதல் செய்யப்படாத நெல்மணிகள் பாழடைந்து விட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுபோல், பல விவசாயிகள் 20 நாட்கள் காத்திருந்தும், ஆளும் கட்சியினரின் கருணை பார்வை இல்லாததால், நெல்லை விற்பனை செய்ய முடியாமல் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.

நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை கசக்கி பிழியும் இடைத்தரகர்களை (தனது கட்சிக்காரர்களை) முதல்-அமைச்சர் உடனடியாக கட்டுப்படுத்தி, அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story