மத்திய அரசின் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி, நெல்லை, குமரி மீனவர்கள் போராட்டம்


மத்திய அரசின் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி, நெல்லை, குமரி மீனவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2021 10:58 PM GMT (Updated: 9 Aug 2021 10:58 PM GMT)

தேசிய மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கடல் மீன்வள மசோதாவை எதிர்த்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை கரையில் நிறுத்தி வைத்தனர்.

கிராமப்பகுதிகளில் கருப்பு கொடிகளையும் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 நாட்டுப்படகு மீனவர்களும், 420 விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை.

கடலில் இறங்கி போராட்டம்

மேலும், தருவைகுளம் கடற்கரையில் தூத்துக்குடி மாவட்ட அனைத்து மீனவர்கள் கூட்டமைப்பு மற்றும் தருவைக்குளம் சந்தியாகப்பர் நாட்டுப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதேபோல தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பும் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாவட்டம் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல் உள்பட மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மத்திய அரசின் புதிய மீன்வள மசோதாவை கைவிடக்கோரி கன்னியாகுமரியில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் படகுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்புகள், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அமைப்பு சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கோட்டார் மறைமாவட்ட பிஷப் நசரேன் சூசை, எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், ராஜன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story