கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் அண்ணாமலை வலியுறுத்தல்


கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் அண்ணாமலை வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 Jan 2022 9:48 PM GMT (Updated: 25 Jan 2022 9:48 PM GMT)

தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யா குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்தில், கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மைக்கேல்பட்டில் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

துணைத்தலைவர்கள் எம்.என்.ராஜா, வி.பி.துரைசாமி, சக்ரவர்த்தி, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மூத்த நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், கராத்தே தியாகராஜன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின்போது அண்ணாமலை பேசியதாவது:-

பள்ளி மாணவி தற்கொலை

தஞ்சையில் மன உளைச்சலுக்கு ஆளாகி பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளது நெஞ்சை பதற வைக்கிறது. இதில் உண்மை என்னவென்பது மறைக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.

மாணவி லாவண்யா மரணம் குறித்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மாணவி என்னென்ன கொடுமைகளுக்கு ஆளானார்? என்பது சொல்லப்பட்டிருக்கிறது. படிக்கும் பள்ளியிலேயே மாணவிக்கு நடந்த கொடுமைகள் கண்டிக்கத்தக்கது. இதனால் தமிழ் சமுதாயமே கோபத்தில் இருக்கிறது.

மாணவி லாவண்யா கட்டாய மதமாற்றத்துக்கு உட்படாததால் பல்வேறு கொடுமைகளுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி தற்கொலை முடிவை தேடியிருக்கிறார். இந்த கொடுமைகளை பார்த்து எப்படி சும்மா இருக்க முடியுமா?

சி.பி.ஐ. விசாரணை

எனவே தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணத்தை தமிழக அரசு வழங்கிட வேண்டும். 2 வருடங்களாக மாணவி அனுபவித்த கொடுமைகள் என்னென்ன? இந்த கொடுமைகளுக்கு பின்னணியில் யாரெல்லாம் உள்ளார்கள்? என்பதை கண்டறிந்து சட்டத்தின்முன் நிறுத்த இந்த வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை. இனியும் இதுபோல சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்றால் தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும். மாணவி லாவண்யா மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம். இந்த போராட்டம் வெறும் ஆரம்பமே.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநகர தலைவர் ஏ.டி.இளங்கோவன், அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார், சினிமா நடிகர் செந்தில் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Next Story