“எடப்பாடி பழனிசாமி அதிமுகவா? அல்லது பாஜகவா?” - திருமாவளவன் கேள்வி

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் செய்தி தொடர்பாளராகவே மாறி பேசி வருகிறார் என திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது;-
“பாஜக தான் அதிமுகவை இயக்குகிறது என்று தொடர்ந்து நாங்கள் விமர்சித்து வருகிறோம். அதை உறுதிப்படுத்தும் வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது பாஜகவின் செய்தி தொடர்பாளராகவே மாறி பேசி வருகிறார்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது பாஜகவின் செயல்திட்டம். அதை அதிமுகவின் தலைவர்களில் ஒருவரான எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அதே போல் மேற்கு வங்க கவர்னர் தன்னுடைய அதிகார வரம்பு மீறலை வெளிப்படுத்தும் வகையில் சட்டமன்றத்தை முடக்கியுள்ளார். அவருக்கு அப்படி எந்த அதிகாரமும் இல்லை.
ஆனால் அதை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியாப்படுத்துகிறார். எனவே அவர் அதிமுகவின் இனை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறாரா? அல்லது பாஜகவின் செய்தி தொடர்பாளராக? என்ற கேள்வி எழுகிறது.
பாஜக அதிமுகவின் கூட்டணியில் இருந்து விலகி போனாலும், பாஜகவின் தயவில் தான் அதிமுக இருக்கிறது என காட்டிக்கொள்ளும் வகையில் அதிமுகவின் தலைவர்கள் பேசுகிறார்கள். அது உள்ளபடியே வேடிக்கையாக இருக்கிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story