‘தருமபுரம் ஆதீன பல்லக்கை நானே தூக்குவேன்’ - அண்ணாமலை பேட்டி


‘தருமபுரம் ஆதீன பல்லக்கை நானே தூக்குவேன்’ - அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 4 May 2022 11:12 PM GMT (Updated: 2022-05-05T04:42:22+05:30)

தடையை மீறி பட்டின பிரவேசத்தை பா.ஜ.க. நடத்தும் என்றும், தருமபுரம் ஆதீன பல்லக்கை நானே தூக்குவேன் என்றும் அண்ணாமலை கூறினார்.

சென்னை,

கடந்த 4 நாட்களாக இலங்கைக்கு சென்று அங்குள்ள தமிழ் மக்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கை அதிபருக்கு கொடுக்கும் மரியாதையை நமது பிரதமர் மோடிக்கும் அங்குள்ள மக்கள் கொடுக்கிறார்கள். இந்தியா சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட 14 ஆயிரம் வீடுகளிலும் பிரதமர் மோடியின் படத்தை அந்த மக்கள் வைத்துள்ளனர்.

கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போது வரை இந்தியா சார்பில் இலங்கைக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு உள்ளன.

இலங்கைக்கு சென்றபோது அங்குள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் மூலம் இலங்கை அரசுக்கு சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளேன். கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் தேவாலய விழாவிற்கு தமிழகத்தில் உள்ளவர்கள் விசா மற்றும் பாஸ்போர்ட் இல்லாமல் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும். இலங்கை அரசால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும். அவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும்.

தடையை மீறி பா.ஜ.க. நடத்தும்

1974-ம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தின்படி 6-வது பிரிவின்படி தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் தங்கள் வலைகளை காய போடுவதற்கும், கச்சத்தீவைத் தாண்டி நெடுந்தீவு வரை சென்று மீன் பிடிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்த 6-வது பிரிவு 1976-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த கோரிக்கை வைத்துள்ளேன். இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்ற தமிழக முதல்-அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று தமிழக பா.ஜ.க.வும் அரசுடன் கைகோர்த்து நிதியுதவி வழங்கி மத்திய அரசு மூலம் இலங்கைக்கு அனுப்புவோம்.

தருமபுர ஆதீன பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை தடை செய்திருப்பதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. தடையை தமிழக அரசு நீக்க வேண்டும். இல்லாவிட்டால், தடையை மீறி பட்டின பிரவேச நிகழ்ச்சியை தமிழக பா.ஜ.க. நடத்தும்.

நானே பல்லக்கு தூக்குவேன்

ஒரு குருவை பல்லக்கில் தூக்குவதை மனிதனை தூக்குவதாக பார்க்க கூடாது. என்னை பொறுத்தவரை குருமார்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். எனவே, நானே (அண்ணாமலை) அங்கு நேரில் சென்று பல்லக்கை தூக்க தயாராக இருக்கிறேன். அதே நேரத்தில் கூலிக்கு பல்லக்கு தூக்குவதை தமிழக பா.ஜ.க. ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

2 ஆயிரம், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த சித்தாந்தம் நடந்து கொண்டு இருக்கிறது. ஏன்? கருணாநிதி 5 முறை முதல்-அமைச்சராக இருந்தபோது கூட பட்டின பிரவேசத்தை தடை செய்யவில்லை. ஆனால் தற்போதைய தி.மு.க. அரசு அதற்கு தடை விதிப்பது ஏன்?

செயற்கை மின்தடை

ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியை பொறுத்தவரை சாதனை என்று சொல்வதை விட அது சோதனையாகத்தான் மாறி இருக்கிறது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போதே 3 முறை மின்சார தடை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேசினாலே வழக்கு போடப்படும். இது இந்த ஆட்சியின் அலங்கோலத்தின் சாட்சி. 30 ஆயிரம் டன் நிலக்கரி தூத்துக்குடியில் இருந்தபோதிலும் அனல் மின்நிலையத்தின் 3 அலகுகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். செயற்கையாக மின்தடையை ஏற்படுத்துகிறார்கள்

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story