மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு: 3 தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு


மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு: 3 தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 May 2022 8:26 PM GMT (Updated: 15 May 2022 8:26 PM GMT)

மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடும் 3 தி.மு.க. வேட்பாளர் பெயர்கள் வெளியிடப்பட்டது. ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என்ற இரு அவைகள் இருக்கின்றன. இதில் மக்களவையில் 545 இடங்களும், மாநிலங்களவையில் 250 இடங்களும் உள்ளன.

பதவிக்காலம் முடிவு

மக்களவை எம்.பி.க்களை பொதுமக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறார்கள். மாநிலங்களவை எம்.பி.க்களை ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

தமிழகத்தில் இருந்து மொத்தம் 18 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதில் தி.மு.க.வை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோரின் பதவிக்காலமும், அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலமும் அடுத்த மாதம் (ஜூன்) 29-ந் தேதி முடிவடைகிறது.

வேட்புமனு தாக்கல் 24-ந் தேதி தொடக்கம்

இதேபோல், மேலும் 14 மாநிலங்களை சேர்ந்த 51 உறுப்பினர்களின் பதவிக்காலமும் அதே காலக்கட்டத்தில் முடிகிறது. எனவே, மொத்தம் உள்ள 57 இடங்களுக்கும் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10-ந் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 24-ந் தேதி தொடங்குகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில், எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையில் அ.தி.மு.க. வின் பலம் குறைந்து, தி.மு.க. வின் பலம் அதிகரித்துள்ளது. எனவே, தற்போது நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில், அ.தி.மு.க.விடம் உள்ள 3 இடங்களில் ஒன்று தி.மு.க. வின் வசம் செல்கிறது. இதனால், தி.மு.க.வுக்கு 4 இடம் கிடைக்கிறது.

தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இந்த நிலையில், வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 8 நாட்களே இருக்கும் நிலையில், தி.மு.க. தனது வேட்பாளர் பட்டியலை நேற்று திடீரென வெளியிட்டது. இது தொடர்பாக, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜூன் மாதம் 10-ந் தேதி நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், தி.மு.க. கூட்டணிக்கான 4 இடங்களில், இந்திய தேசிய காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

3 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், தி.மு.க. வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராஜேஸ்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு

அறிவிக்கப்பட்டுள்ள தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தி.மு.க.வில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சு.கல்யாணசுந்தரம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பம்பப்படையூரை சேர்ந்தவர். 81 வயதான இவர் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக இருந்து வருகிறார். கல்யாண சுந்தரம் 1986-ம் ஆண்டு கும்பகோணம் ஒன்றிய பெருந்தலைவர், 1997-ம் ஆண்டு மாவட்ட கூட்டுறவு பால்வள தலைவர், 2006-ம் ஆண்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.

கிரிராஜன்

அதேபோல், இரா.கிரிராஜன், முதல்-அமைச்சர் தொகுதியான சென்னை கொளத்தூரை சேர்ந்தவர். இவர் தி.மு.க.வில் சட்டத்துறை செயலாளராக கடந்த 2015-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். 2001-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சி கவுன்சிலராகவும், 6 மாதம் மண்டல குழு தலைவராகவும் இருந்துள்ளார்.

2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கிரிராஜனுக்கு மைலிதி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் யார்?

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் 2020-ம் ஆண்டு முதல் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக இருந்து வருகிறார். 10 ஆண்டுகளாக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்துதான் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, தி.மு.க.வுக்கு கூடுதலாக கிடைத்த ஒரு இடம், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில், ஏற்கனவே மராட்டிய மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ப.சிதம்பரத்தின் பதவிக்காலமும் தற்போது முடிகிறது. எனவே, அவருக்கு இந்த முறை தமிழகத்தில் இருந்து வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதே நேரத்தில், தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலமும் விரைவில் முடிய இருக்கிறது. எனவே, அவரும் மாநிலங்களவை உறுப்பினராக விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இவர்கள் இருவரில் ஒருவருக்கு கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கும் என்று தெரிகிறது.

அ.தி.மு.க. வேட்பாளர்கள்

அ.தி.மு.க.வை பொறுத்தவரை 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம் என்பது 2 ஆக குறைந்திருக்கிறது. எனவே, அந்த 2 இடங்களில் ஒன்றில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், மற்றொரு இடத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும் நிறுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.


Next Story