நமது ஆட்சி உயர்கல்வியின் பொற்காலமாகத் திகழும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


நமது ஆட்சி உயர்கல்வியின் பொற்காலமாகத் திகழும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 16 May 2022 4:11 PM IST (Updated: 16 May 2022 4:11 PM IST)
t-max-icont-min-icon

நமது ஆட்சி உயர்கல்வியின் பொற்காலமாகத் திகழும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் 164-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “கையில் பட்டத்துடனும் - கண்களில் கனவுகளுடனும் - எதிர்காலத்தை எதிர்நோக்கி இருக்கக்கூடிய மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

​உங்களது திறமைக்கும் - அறிவுக்கும் - ஆற்றலுக்கும் தகுந்த எதிர்கால வாழ்க்கை நிச்சயமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது. ​உங்கள் பெயரோடு இனி சேர இருக்கும் பட்டம் என்பது - இந்த சமூகத்தில் உங்களை அடையாளம் காட்டும் அறிவு அடையாளம். இந்த பட்டத்தோடு உங்களுடைய பட்டப் படிப்பு முடியப் போவதில்லை. அடுத்தடுத்த உயர்வுக்கு இது ஒரு அடித்தளம், அவ்வளவுதான். எந்த மனிதரின் சிந்தனைக்கும் அவரது மரணத்தில்தான் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. அது போலத்தான் படிப்பும் - இறுதிவரை தொடர வேண்டும்.

​பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் அரசுக்கு வைக்கும் கோரிக்கை என்னவென்றால் - 'வேலைகள் இருக்கின்றன, ஆனால் அதற்குத் தகுதியான இளைஞர்கள் கிடைக்கவில்லை' என்று சொல்கிறார்கள். ​அப்படியானால் இளைஞர்களுக்கு அனைத்துத் தகுதிகளையும் உருவாக்க வேண்டிய கடமையானது இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தக் கடமையைத்தான் தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது. அதில் வெற்றி காண வேண்டும் என்று நினைக்கிறது.

​மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டுதல்கள், கல்வி நிறுவனங்கள், நாடு முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட உயர்கல்விக்கான உதவித்தொகைகளின் தகவல்கள் போன்ற தகவல்களை எளிதில் பெறும் வகையில், ’நான் முதல்வன்’என்பது உருவாக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் நமது ஆட்சி உயர்கல்வியின் பொற்காலமாகத் திகழும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “பட்டம் பெறுவதோடு மாணவர்கள் வேலைவாய்ப்புக்குத் தகுதியானோராக - சமூகநீதிப் பார்வை கொண்டவர்களாக விளங்கிடத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன!

காமராசரின் ஆட்சி பள்ளிக்கல்வியின் பொற்காலம்; கலைஞரின் ஆட்சி கல்லூரிக்கல்வியின் பொற்காலம்; நமது ஆட்சி உயர்கல்வியின் பொற்காலமாகத் திகழும்!” என்று அதில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 




Next Story