கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிபாளர் தனிப்பிரிவைச் சேர்ந்த 30 காவலர்கள் பணியிட மாற்றம்
கலவரம் தொடர்பாக தனிப்பிரிவு போலீசார் உரிய முன்னெச்சரிக்கை தகவல் தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசுர் அருகே கோபசந்திரம் கிராமத்தில் எருது விடும் விழாவிற்கு அனுமதி வழங்கக்கோரி கடந்த 2-ந்தேதி சாலை மறியல் போராட்டம் நடந்தது. சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக நடந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக, ஆயிரக்கணக்கான வாகனங்கள் பெங்களூர் சாலையில் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றன.
அப்போது திடீரென போராட்டக்காரர்கள் அங்கு நின்ற வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். இதில் எஸ்.பி. உள்பட 20 போலீசார் காயமடைந்தனர். மேலும் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் என 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன.
இதனால் சாலை மறியல் போராட்டம் மிகப்பெரிய கலவரமாக மாறியது. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தண்ணீரை பீச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களைக் கலைத்தனர். இந்த போராட்டம் தொடர்பாக போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சுமார் 200 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தனிப்பிரிவு போலீசார் உரிய முன்னெச்சரிக்கை தகவல் தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இன்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிபாளர் தனிப்பிரிவைச் சேர்ந்த 30 காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.