மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணி காரணமாக சென்னை-ஆற்காடு சாலையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிக்காக சென்னை-ஆற்காடு சாலையில் பவர்ஹவுஸ் முதல் போரூர் மேம்பால சந்திப்பு வரை 4 நாட்கள் சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னை-ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் முதல் போரூர் மேம்பாலம் சந்திப்பு வரை சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணி நடைபெற்று வருகிறது. இதனால் போரூர் மேம்பாலம் சந்திப்பில் தற்போதுள்ள போக்குவரத்து முறையில் இன்று (வௌ்ளிக்கிழமை) முதல் 23-ந் தேதி வரை 4 நாட்கள் சோதனை ஓட்டமாக கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதன்படி போரூர் மேம்பால சந்திப்பில் பூந்தமல்லி நோக்கி செல்லும் சர்வீஸ் சாலை மூடப்பட உள்ளது. எனவே குன்றத்தூர் மார்க்கத்தில் இருந்து போரூர் மேம்பாலம் சர்வீஸ் சாலை வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லும் வாகனங்கள் இடதுபுறம் திரும்ப இயலாது. இவ்வாகனங்கள் வலது புறம் திரும்பி கிண்டி மார்க்கமாக செல்லும் சர்வீஸ் சாலையில் சென்று மவுண்ட்-பூந்தமல்லி சாலை, ராமகிருஷ்ணா சாலை சந்திப்பில் "யூ" டர்ன் எடுத்து போரூர் மேம்பாலம் வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லலாம்.
குன்றத்தூர் மார்க்கத்தில் இருந்து போரூர் மேம்பால சந்திப்பு வழியே பூந்தமல்லி நோக்கி செல்லும் மாநகர பஸ்கள் குன்றத்தூர் மெயின் ரோடு பாய்கடை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மாங்காடு சாலை வழியாக பூந்தமல்லி செல்லவும். குன்றத்தூர் மார்க்கத்தில் இருந்து போரூர் மேம்பாலம் சந்திப்பு வழியே பூந்தமல்லி நோக்கி செல்லும் இருசக்கர வாகனங்கள் போரூர் சந்திப்பிற்கு முன்பாக குன்றத்தூர் மெயின் ரோடு மசூதி தெரு சந்திப்பில் இடது புறம் திரும்பி மசூதி தெரு வழியாக சென்று மவுண்ட்-பூந்தமல்லி சாலையை அடைந்து பூந்தமல்லி நோக்கி செல்லவும்.
வடபழனி மார்க்கத்தில் இருந்து ஆற்காடு சாலை வழியாக வரும் அனைத்து வாகனங்களும் ஆற்காடு சாலை லட்சுமி நகர் 40 அடி சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மவுண்ட்-பூந்தமல்லி சாலையை அடைந்து போரூர் மேம்பாலம் வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லவும்.
ஆற்காடு சாலையில் இருந்து வரும் வாகனங்கள் போரூர் மேம்பாலம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பூந்தமல்லி நோக்கி செல்ல இயலாது. எனவே வாகனங்கள் இடதுபுறம் திரும்பி கிண்டி நோக்கி செல்லும் சர்வீஸ் சாலையில் சென்று மவுண்ட்-பூந்தமல்லி சாலை ராமகிருஷ்ணா சாலை சந்திப்பில் "யூ" டர்ன் எடுத்து போரூர் மேம்பாலம் வழியாக செல்லலாம்.
வாகனங்கள் கிண்டி மார்க்கத்திலிருந்து மவுண்ட்-பூந்தமல்லி சாலை வழியாக வந்து போரூர் மேம்பாலம் சர்வீஸ் சாலை வழியாக பூந்தமல்லி நோக்கி செல்ல இயலாது. எனவே இவ்வாகனங்கள் போரூர் மேம்பாலம் வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லவும்.
பூந்தமல்லி மார்க்கத்தில் இருந்து போரூர் மேம்பாலம் சர்வீஸ் சாலை வழியாக வந்து "யூ" டர்ன் எடுத்து மீண்டும் பூந்தமல்லி நோக்கி செல்ல இயலாது. எனவே இவ்வாகனங்கள் நேராக சர்வீஸ் சாலையில் சென்று மவுண்ட்-பூந்தமல்லி சாலை ராமகிருஷ்ணா சாலை சந்திப்பில் "யூ" டர்ன் எடுத்து போரூர் மேம்பாலம் வழியாக மீண்டும் பூந்தமல்லி நோக்கி செல்லவும்.
இவ்வாறு ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.