போரூரில் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் தூத்துக்குடி கோர்ட்டில் சரண்


போரூரில் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் தூத்துக்குடி கோர்ட்டில் சரண்
x

சென்னை போரூரில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் தூத்துக்குடி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

சென்னை

மாங்காடு அடுத்த கொளுத்துவான்சேரி பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 25). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலில் உள்ள தனது தாயை பார்க்க வந்தபோது மர்ம நபர்கள் வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை வழக்கு சம்பந்தமாக போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த காஞ்சீபுரம் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் அஜித்குமார் (23), நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியைச் சேர்ந்த முருகன் மகன் நவீன்குமார் (25), சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசக நகரைச் சேர்ந்த விஜயகுமார் மகன் யுவின்குமார் (28) மற்றும் சென்னை காந்தி நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் மணிகண்டன் (25) ஆகிய 4 பேர் தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இவர்களை மாஜிஸ்திரேட்டு சேரலாதன் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் அவர்கள் 4 பேரையும் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பிறகு தான் கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story