திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து கார்கள் மோதிய கோர விபத்து - 4 பெண்கள் பலி
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து கார்கள் மோதிய விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் தங்கசாமி (வயது 67). இவரது மனைவி மங்கையர்க்கரசி (வயது 64). பேரன் பிரதுன் (வயது 7), உறவினர்கள் பூஜா (வயது 20), ரஞ்சனா (வயது 20) ஆகிய ஐந்து பேரும் ஒரு காரில் ராஜபாளையத்திலிருந்து திருச்சி மாவட்டம், நவல்பட்டில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த செவந்தம்பட்டி விளக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை மையதடுப்பைத் தாண்டி எதிர்சாலைக்கு சென்று எதிரில் வந்த காரில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த இரண்டு கார்களும் விபத்துக்குள்ளான நிலையில் அந்த கார் மீது பின்னால் வந்த மற்றொரு காரும் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து அறிந்த துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் சிறப்பு நிலை அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் சம்பவ இடத்திலேயே மங்கையர்க்கரசி, ரஞ்சனா, பூஜா மற்றும் மற்றொரு காரில் சென்ற பத்மா ஆகிய நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் சிலர் படுகாயம் அடைந்து மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இறந்த நான்கு பேரின் உடல்களை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.