கத்திமுனையில் 4 பேரை தாக்கி காரில் கடத்திய வழக்கில் 5 பேர் கைது - 2 கார்கள், 3 கத்திகள் பறிமுதல்


கத்திமுனையில் 4 பேரை தாக்கி காரில் கடத்திய வழக்கில் 5 பேர் கைது - 2 கார்கள், 3 கத்திகள் பறிமுதல்
x

கத்திமுனையில் 4 பேரை தாக்கி காரில் கடத்திய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ் (24), அஜித் (23). இவர்கள் இருவரையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ், ஆரோன், பிரதாப், பீட்டர், பாலாஜி, கருணாகரன் என்ற மணி ஆகியோர் முன்விரோதம் காரணமாக தகாத வார்த்தையால் பேசி அடித்து உதைத்து மிரட்டியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், அஜித், ஆகியோர் தனது நண்பர்களான சுனில், ஜெய் ஆகியோருடன் சேர்ந்து ராஜேஷ் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் தனது நண்பர்களுடன் 2 கார்களில் திருவள்ளூர் அடுத்த அயத்தூர் பகுதில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த சுனில், அஜித், சுரேஷ் ஆகியோரை கத்தியால் தாக்கி காரில் கடத்தி சென்றனர்.

அவர்கள் திருநின்றவூர் வழியாக செல்லும் போது அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வேகமாக சென்ற 2 காரை போலீசார் நிறுத்துமாறு சைகை காட்டியும் நிற்காமல் சென்றதால் சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக அந்த காரை போலீஸ் வாகனத்தில் துரத்திச்சென்றனர்.

சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பின் தொடர்ந்து சென்று போலீசார் அந்த 2 கார்களையும் மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த ராஜேஷ் தப்பியோடி விட்டார். மேலும் அந்த காரில் இருந்த 5 பேரை பிடித்ததில் டிரைவர் தவிர சுனில், அஜித், சுரேஷ், ஜெய் ஆகிய 4 பேரை செவ்வாப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து செவ்வாப்பேட்டை போலீசார் காயமடைந்த 4 பேரையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகி்ச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செவ்வாப்பேட்டை போலீசார் நடுக்குத்தகை பகுதியை சேர்ந்த கார் டிரைவர் கருணாகரன் என்ற மணி (28), அருண்பாபு என்ற ஆரோன் (28) புருேஷாத்தமன் என்ற பீட்டர் (29) ஜெயபிரதாப் என்ற பிரதாப் (29), தேவ் ஆனந்த் என்ற ஆனந்த் (30) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தப்பியோடிய ராஜேசை செவ்வாப்பேட்டை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட மேற்கண்ட 5 பேரிடமிருந்து 2 கார்களையும், 3 பட்டாக்கத்திகளையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


Next Story