வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 5 பேர் கைது


வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 5 பேர் கைது
x

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிய வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீதர் (வயது 33). இவர் பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் ஊர்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார்.

கடந்த மாதம் 19-ந்தேதி மதியம் வீட்டை பூட்டி விட்டு ஸ்ரீதரும், அவரது மனைவி பிரியதர்சினியும் (30) கும்மிடிப்பூண்டி பஜாருக்கு வந்து விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் முன் பக்க கதவுடன் சேர்ந்த பூட்டு கடப்பாரை கொண்டு நெம்பி உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு ஸ்ரீதர் அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, தனியறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 25 பவுன் நகைகள், ரொக்கப்பணம் ரூ.25 ஆயிரம் மற்றும் 200 கிராம் எடை கொண்ட வெள்ளி பொருட்கள் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

பட்டபகலில் நடைபெற்ற இந்த துணிகர திருட்டு குறித்து இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள் அடிப்படையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வினோத்கண்ணன் (30), அருண் என்கிற பூச்சி இருளப்பன் (22), பொன்னையன் (27), ராஜேந்திரன் (36) மற்றும் சென்னை செங்குன்றம் அடுத்த எடப்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்கிற அப்பு (33) ஆகியோரை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து திருட்டு போன பணம் மற்றும் பொருட்களையும், பதிவெண் இல்லாத ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story