'பல்வேறு துறைகளைச் சேர்ந்த 55 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்' - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்


பல்வேறு துறைகளைச் சேர்ந்த 55 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
x

நாட்டின் வளர்ச்சி பெண்களிடம் இருந்தே தொடங்குகிறது என்பதை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை கோட்டையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக முப்படையினர் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கொடியேற்றி வைத்த பின்னர் தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-

"இந்தியாவின் முக்கியமான அங்கம் நம் தமிழ்நாடு. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 3-வது ஆண்டாக தேசியக் கொடியை ஏற்றி வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன். சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றுவதில் தி.மு.க. அரசு யாருக்கும் சளைத்தது அல்ல.

மாநிலங்களுக்கு மாநிலம் உணவு, மொழி, பண்பாட்டில் மாறுபாடு உள்ளது. வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையுடன் வாழ்வதே நம் பலம். மதங்களின் பெயரால் மக்களிடையே உள்ள பிளவை களைய முயன்றவர் மகாத்மா காந்தி. மதங்களின் பெயரால் மக்கள் சண்டை போட்டால், அந்த இடங்களுக்குச் சென்று அமைதிப்படுத்துவதே தனது முக்கியமான பணி என்று மகாத்மா காந்தி கருதினார்.

நாட்டின் வளர்ச்சி பெண்களிடம் இருந்தே தொடங்குகிறது என்பதை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். புதுமைப் பெண், கட்டணமில்லா பேருந்து சேவை என பெண்களுக்கான திட்டங்களை வகுத்துள்ளோம். பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் இனி 'விடியல் பயணத் திட்டம்' என்று அழைக்கப்படும்.

ஆட்டோ ஓட்டுநர்களாக பணிபுரியும் பெண்கள் புதிதாக ஆட்டோ வாங்குவதற்கென ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 141 பேர் பயனடைந்துள்ள நிலையில், தற்பொழுது மேலும் 500 மகளிர் பயன் பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப்படும். மேலும், ஆட்டோ ஓட்டுநர்களாக பணிபுரியும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

தாய்நாட்டிற்காக தங்களுடைய இளம் வயதை நாட்டின் எல்லையில் ராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்று திரும்பும் முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் நபர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி, திறனை மேம்படுத்தவும், அவர்கள் உரிய பணியில் அமரும் வரையில் தக்க உதவி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் கலைஞர் நூற்றாண்டுப் பூங்கா ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். நடப்பாண்டுகளில் பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 55 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம். அனைவருக்குமான அரசு என்பதன் அடையாளமாக இதுபோன்ற திட்டங்களைச் சிந்தித்து சிந்தித்து செயல்படுத்தி வருகிறோம்.

ஒற்றுமையால் கிடைத்த விடுதலை அதே ஒற்றுமையால் காப்போம். வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு சாய்ப்போம். நாம் இந்தியர்கள் என்ற பெருமையுடன் நம் இந்தியாவை நேசிக்கும் அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்." இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


Next Story