சென்னை நகைக்கடையில் 9 கிலோ நகை கொள்ளை: வெளிமாநில கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது - போலீஸ் கமிஷனர் பேட்டி


சென்னை நகைக்கடையில் 9 கிலோ நகை கொள்ளை: வெளிமாநில கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது - போலீஸ் கமிஷனர் பேட்டி
x

சென்னை பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட வெளிமாநில கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்துள்ளது, அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

சென்னை

சென்னையில் மோட்டார் சைக்கிள்களில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில் உள்ள வேப்பேரி சிக்னல் சந்திப்பில் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டு, ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்தவர்களை பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். பின்னர் அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர், இணை கமிஷனர் மயில்வாகனன், துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன், உதவி கமிஷனர்கள் கிறிஸ்டோபர், பாஸ்கர், விஜயராமுலு உள்ளிட்ட ஏராளமான போலீசார் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர்.

பின்னர் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னையை பொறுத்தமட்டில் இருசக்கர வாகன ஓட்டிகள் 85 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிகிறார்கள். பின்னால் அமர்ந்து வருபவர்களில் 13 சதவீதம் பேர்தான் ஹெல்மெட் அணிகிறார்கள்.

ஒரு வாரம் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி, ஹெல்மெட் அணிந்து பின்னால் உட்கார்ந்து வரும் 5,600 பேருக்கு நற்சான்றிதழ் வழங்க முடிவு செய்து உள்ளோம்.

சென்னை பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ நகைகள் கொள்ளை போன வழக்கில் நல்ல தடயங்கள் கிடைத்துள்ளன. 7 தனிப்படை அமைத்து விசாரணை நடக்கிறது. மேலும் கூடுதலாக 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

ஒரு இணை கமிஷனர், 2 துணை கமிஷனர்கள் தலைமையில் விசாரணை நடக்கிறது. வெளிமாநில கொள்ளையர்கள் இதில் சம்பந்தப்பட்டு உள்ளனர்.

கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நடந்து குற்றவாளிகள் பிடிபட்டு உள்ளனர்.

அந்த வழக்குகளில் பிடிபட்டுள்ள குற்றவாளிகளின் பெயர் பட்டியலை சேகரித்து விசாரித்து வருகிறோம். அதில் சிலரது அடையாளம் தெரிந்துள்ளது. பெயர்களும் கிடைத்துள்ளன. விரைவில் இந்த வழக்கில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள். 3 உதவி கமிஷனர்கள் தலைமையில் வெளிமாநிலங்களுக்கு தனிப்படையினர் சென்று உள்ளனர்.

கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனத்தின் பதிவு எண் போலியானது. தமிழக பதிவு எண் வாகனத்தில் வந்துள்ளனர். வெளிமாநிலத்துக்கு தப்பிச்செல்லும் போது அதை மாற்றி உள்ளனர். வெளிமாநிலத்துக்கு தப்பிச்சென்று விட்டதால், அவர்களை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

சவுகார்பேட்டை கொள்ளை வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கொள்ளை போன பணத்தில் ரூ.70 லட்சம் அளவுக்கு மீட்கப்பட்டு உள்ளது. கொள்ளை பணத்தில் வாங்கப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் பயங்கரவாதிகள் தொடர்பு இருப்பதாக தகவல் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story