ஆவடி அருகே மினி பஸ் மோதி 1½ வயது குழந்தை பலி


ஆவடி அருகே மினி பஸ் மோதி 1½ வயது குழந்தை பலி
x

ஆவடி அருகே மினி பஸ் மோதி 1½ வயது குழந்தை பலியானது. இது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் காசிமணி (வயது 27). இவருடைய மனைவி மகேஸ்வரி (23). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 1½ வயதில் யுவா என்ற மகனும் இருந்தான். இவர்கள் குடும்பத்துடன் ஆவடி அடுத்த ஆயில்சேரி பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

அதேபோல் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ஆசைசெல்வம் (29) என்பவரும் இவர்களுடன் செங்கல் சூளையில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். நேற்று காலை ஆசைசெல்வம், பால் பாக்கெட் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றார்.

அப்போது காசிமணியின் 1½ வயது குழந்தை யுவாவையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றார். ஆவடி அடுத்த ஆயில்சேரி அருகே சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு குழந்தை யுவாவை கீழே இறக்கிவிட்டு பால் வாங்க கடைக்கு சென்றார்.

அப்போது ஆவடி காமராஜர் நகரில் இருந்து பூந்தமல்லி நோக்கி வந்த மினி பஸ் சாலையோரத்தில் நடந்து சென்ற குழந்தை யுவா மீது மோதியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காசிமணி, தலையில் படுகாயம் அடைந்த குழந்தையை ஆவடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை யுவா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி பஸ் டிரைவர் இளங்கோ (58) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஆசைசெல்வம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை அறிந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் ஆசைசெல்வத்தின் உறவினர்கள் நேற்று மாலை பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையத்துக்கு வந்து ஆசைசெல்வம் மீது போட்ட வழக்கை ரத்து செய்ய கோரி பூந்தமல்லி - ஆவடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதை ஏற்று சாைல மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story