'தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் மிகவும் மோசமான ஆட்சி நடந்து வருகிறது' - ஜே.பி.நட்டா


தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் மிகவும் மோசமான ஆட்சி நடந்து வருகிறது - ஜே.பி.நட்டா
x

தி.மு.க. தலைமைக்கு ஜனநாயகத்தின் மீது மரியாதை இல்லை என ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்த 'என் மண் என் மக்கள்' யாத்திரை இன்றோடு நிறைவு பெறுகிறது. இதையடுத்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார். தொடர்ந்து தங்க சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஜே.பி.நட்டா கூறியதாவது;-

"பிரதமர் நரேந்திர மோடியின் மனதில் தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்பான இடம் உள்ளது. அது வெறும் வார்த்தைகளில் மட்டுமின்றி, அவரது செயல்களிலும் வெளிப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உலகின் எந்த பகுதிக்குச் சென்று உரையாற்றினாலும் தமிழ் மொழி பற்றியும், தமிழ்ப் புலவர்களைப் பற்றியும் பேசி வருகிறார்.

நீதியின் அடையாளமாக விளங்கும் 'செங்கோல்' தமிழ்நாட்டில் இருந்து நமக்கு கிடைத்தது. இந்தியாவின் ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாடாளுமன்றத்திற்குள் நுழையும்போது செங்கோல் கொண்டு செல்லப்பட்டது நமக்குக் கிடைத்த பெருமையாகும்.

தமிழகத்தின் மைந்தன் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்து கவுரவப்படுத்தியுள்ளது. நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு எத்தகையது என்பதை பிரதமர் மோடியும், பா.ஜ.க.வும் நன்றாக உணர்ந்திருக்கிறோம்.

தமிழ்நாடு மிகச்சிறந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டது. தமிழ் மொழி உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகும். கலை, இலக்கியம், அறிவியல் உள்பட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு மிகப்பெரிய பங்களித்துள்ளது.

ஆனால் இத்தனை சிறப்புகளைக் கொண்ட தமிழ்நாட்டிற்கு இன்று மிகவும் மோசமான தலைமை அமைந்துள்ளது. தி.மு.க. தலைமையில் இங்கு மிகவும் மோசமான ஆட்சி நடந்து வருகிறது. தி.மு.க. தலைமைக்கு ஜனநாயகத்தின் மீது மரியாதை இல்லை. இன்று நான் வரும் வழியில் மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தெரு விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். யாரையும் வெளியே வர அனுமதிக்கவில்லை. இது எனக்கு எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்தியது.

இதுதான் ஜனநாயகமா? இதுதான் தமிழகத்தின் கலாச்சாரமா? இது தமிழகத்தின் கலாச்சாரம் இல்லை என்றால், இத்தகைய நபர்கள் தமிழகத்திற்கு தலைவர்களாக இருக்கக் கூடாது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்களை வெளியேற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை. தி.மு.க.வின் விளக்குகள் அணைக்கப்படும் நேரம் விரைவில் வர இருக்கிறது."

இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.




Next Story