உறவினர்களுடன் திருடச்சென்ற வாலிபா் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு: ஏரியில் உடலை வீசிய கொடூரம்


உறவினர்களுடன் திருடச்சென்ற வாலிபா் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு: ஏரியில் உடலை வீசிய கொடூரம்
x

விளைநிலத்தில் பயிர்களை சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பீளமேடு கிராமத்தை சேர்ந்தவா் ஆறுமுகம் மகன் சங்கர் (வயது 35). சம்பவத்தன்று இவர் தனது மைத்துனர் சவுந்தரபாண்டியன், உறவினர்களான கருப்பையா (25) மற்றும் ரத்தினம் ஆகியோருடன் திருநாவலூர் குடியிருப்பு பகுதியில் திருடுவதற்காக சென்றார்.

அப்போது பொதுமக்கள் கண்ணில் படாமல் ஊருக்குள் நுழைவதற்காக, அருகில் உள்ள வயல்வெளி பகுதி வழியாக அவர்கள் நடந்து சென்றதாக தெரிகிறது. இதில் திருநாவலூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி (42) என்பவர் தான் குத்தகைக்கு எடுத்த விளைநிலத்தில் பயிர்களை சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதை அறியாத 4 பேரும் ஊருக்குள் நுழைய நைசாக சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிா்ச்சி அடைந்த சவுந்தரபாண்டியன், கருப்பையா ஆகியோர் சங்காின் உடலை அங்கேயே போட்டுவிட்டு சென்றனர். இதனிடையே சங்கரின் மனைவி கங்கா தேவி, கடந்த 5-ந்தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற தனது கணவர் மீண்டும் வீடு திரும்பாததால், அவரை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தார்.

இதனிடையே தனது அக்கா கங்காதேவி, கணவரை தேடிவருவதை முதலில் கண்டு கொள்ளாத சவுந்தரபாண்டியன், ஒரு கட்டத்தில் நானும், சங்கர் உள்ளிட்ட 4 பேரும் திருநாவலூருக்கு திருட சென்ற போது மின்வேலியில் சிக்கி சங்கர் இறந்ததை தெரிவித்தார்.

இதைகேட்டு பதறிய மனைவி தனது கணவரின் உடலை மீட்பதற்காக சவுந்தரராஜன் கூறிய இடத்திற்கு சென்றார். ஆனால் அங்கு சங்கரின் உடல் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த கங்காதேவி, இதுகுறித்து திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சந்தேகத்தின் பேரில் கோவிந்தசாமியை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வயல்வெளியை சுற்றிலும் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி சங்கர் இறந்ததை அறிந்ததும், போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக கோவிந்தசாமி, சங்காின் உடலை தூக்கிச்சென்று அதேபகுதியில் உள்ள ஏரிக்கரையில் வீசிவிட்டு சென்றது தொியவந்தது. இதையடுத்து கோவிந்தசாமி கூறிய இடத்திற்கு சென்ற போலீசாா், அங்கு இருந்த சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் விதிமுறைகளை மீறி விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்ததாக கோவிந்தசாமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story