மதுரையில் இருந்து சென்னைக்கு 1 மணி நேரத்தில் விமானத்தில் பறந்து வந்த வாலிபரின் இதயம் - சேலம் விவசாயிக்கு பொருத்தப்பட்டது


மதுரையில் இருந்து சென்னைக்கு 1 மணி நேரத்தில் விமானத்தில் பறந்து வந்த வாலிபரின் இதயம் - சேலம் விவசாயிக்கு பொருத்தப்பட்டது
x

மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் 1 மணி நேரம் 10 நிமிடத்தில் கொண்டு வரப்பட்ட வாலிபரின் இதயம், சேலம் விவசாயிக்கு பொருத்தப்பட்டது.

சென்னை

சேலத்தை சேர்ந்த 36 வயதான விவசாயி, கடந்த 7 ஆண்டுகளாக இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள ரேலா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாற்று இதயம் வேண்டி காத்திருந்தார். இந்தநிலையில் மதுரையில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்த கோவையைச் சேர்ந்த 27 வயது வாலிபர், மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

இதையடுத்து மதுரையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயத்தை, குரோம்பேட்டை ரேலா ஆஸ்பத்திரியில் சிகி்ச்சை பெற்று வரும் சேலம் விவசாயிக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ரேலா ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர்கள் மோகன், பிரேம் ஆகியோர் தலைமையில் 6 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் நேற்று காலை விமானம் மூலம் மதுரைக்கு சென்றனர். பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்த வாலிபரின் இதயத்தை தானமாக பெற்றனர்.

அதனை காலை 11.30 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர்.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து ரேலா ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அங்கு தானமாக பெற்ற வாலிபரின் இதயத்தை, சேலம் விவசாயிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மதுரையில் இருந்து 1 மணிேநரம் 10 நிமிடத்தில் சென்னைக்கு விமானத்தில் இதயத்தை கொண்டு வந்து இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது. வாலிபரின் உடல் உறுப்பு தானத்தால் சேலம் விவசாயி உயிர் பிழைத்து உள்ளார்.


Next Story