சென்னையில் மரம் விழுந்து மாற்றுத்திறனாளி பெண் பலி - ஆட்டோவில் சென்றபோது பரிதாபம்


சென்னையில் மரம் விழுந்து மாற்றுத்திறனாளி பெண் பலி - ஆட்டோவில் சென்றபோது பரிதாபம்
x

சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மரம் விழுந்ததில் மாற்றுத்திறனாளி பெண் பலியானார்.

சென்னை

சென்னை வள்ளுவர்கோட்டம் பகுதியை சேர்ந்த பெண் சூர்யா (வயது 40). மாற்றுத்திறனாளியான இவர், நந்தனம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை பணி முடிந்து சூர்யா ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

ஆட்டோ தேனாம்பேட்டை வி.என். சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோவில் இருந்த சூர்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோவை ஓட்டி வந்த சேகர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த தீயணைப்பு துறையினர் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மரத்தை அகற்றினால் மட்டுமே சூர்யாவின் உடலை ஆட்டோவிலிருந்து கைப்பற்ற முடியும் என்பதால் தீயணைப்பு துறையினரும், போலீசாரும் நீண்ட நேரமாக போராடினர். ஆனால் எந்தவித முயற்சியும் கைகொடுக்கவில்லை.

இதையடுத்து மரத்தை வெட்டி எடுக்கும் எந்திரம் மூலம் மரத்தை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. திடீரென முறிந்து விழுந்த மரத்தால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆட்டோ டிரைவரான சேகர், வாரத்தில் 2 நாட்கள் சூர்யாவை ஆட்டோவில் ஏற்றி சென்று நந்தனத்தில் இறக்கிவிட்டு, பின்னர் மீண்டும் நந்தனத்தில் இருந்து அவரை ஏற்றி சென்று வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் இறக்கி விடுவார். நேற்றும் அவரை ஆட்டோவில் ஏற்றிச்செல்லும் போது இந்த அசம்பாவிதம் நடந்ததாக விபத்தில் உயிர் பிழைத்த சேகர் தெரிவித்தார்.

உடல் நசுங்கி பலியான சூர்யாவின் உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story