இந்திய கடற்படையால் சுடப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்


இந்திய கடற்படையால் சுடப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
x

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடற்படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் வீரகுமார் படுகாயமடைந்தார்.

சென்னை:

இந்தியக் கடற்படையினரால் சுடப்பட்ட தமிழக மீனவர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இந்தியக் கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் அன்புத்தம்பி வீரகுமார் படுகாயமடைந்த செய்தியறிந்து கடும் அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன்.

இதுவரை இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது ஒரே ஒரு முறை கூடத் தடுத்துக் காப்பாற்ற வக்கற்ற உலகின் 4-வது மிக வலிமையான ராணுவமான இந்தியக் கடற்படை, சொந்த நாட்டு மீனவர்களை மட்டும் குறி தவறாமல் சுடுவதென்பது தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? என்ற கேள்வியை ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் எழுப்புகிறது.

எனவே, தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள இந்தியக் கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதோடு, சுடப்பட்ட அன்புத்தம்பி வீரகுமார் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story