லாரி திருடிய வழக்கில் கோர்ட்டில் ஆஜராக வந்த வாலிபர் தப்பி ஓட்டம் - நண்பர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி


லாரி திருடிய வழக்கில் கோர்ட்டில் ஆஜராக வந்த வாலிபர் தப்பி ஓட்டம் - நண்பர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி
x

லாரி திருடிய வழக்கில் கோர்ட்டில் ஆஜராக வந்த வாலிபர் தப்பி ஓட்டம் பிடித்தார். அவருடன் ஆஜராக வந்த நண்பர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை

பூந்தமல்லி அடுத்த பாப்பான்சத்திரம் பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு லாரியை திருடிச்சென்ற வழக்கில் 6 பேரை நசரத்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வந்த நெல்லை மாவட்டம் சிக்கநரசிங்க கிராமத்தை சேர்ந்த பரமசிவம் (வயது 24), ராஜா (25), கல்யாணசுந்தரம் (24), ஆகிய 3 பேரும் இந்த வழக்கு சம்பந்தமாக பூந்தமல்லி நீதிமன்றத்தில் கடந்த ஒரு வருடமாக ஆஜராகாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில், வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் 3 பேரும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு ஸ்டாலின் வழக்கு தொடர்பாக ஏன் 3 பேரும் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, இவ்வளவு நாட்கள் எங்கு இருந்தீர்கள் என அவர்களை கண்டித்தார். மேலும் ஆஜராக வந்த 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட போவதாகவும் தெரிவித்தார்.

இதனால் பயந்து போன ராஜா என்பவர் தனது நண்பர்களை விட்டு அங்கிருந்து நைசாக தப்பி ஓடி விட்டார். இந்த நிலையில், மீண்டும் 3 பேரையும் விசாரணைக்கு அழைத்தபோது, ராஜா அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை மாஜிஸ்திரேட்டு சரமாரியாக சாடியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்து தப்பி ஓடிய ராஜாவை கைது செய்ய மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதுடன், உடன் வந்த அவரது நண்பர்கள் பரமசிவம், கல்யாணசுந்தரம் ஆகிய 2 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் கோர்ட்டு வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story