அண்ணனின் நகை கடையிலேயே 1 கிலோ தங்க கட்டி, ரூ.15 லட்சம் திருடிய வாலிபர்


அண்ணனின் நகை கடையிலேயே 1 கிலோ தங்க கட்டி, ரூ.15 லட்சம் திருடிய வாலிபர்
x

சென்னை சவுகார்பேட்டையில் அண்ணனின் நகை கடையிலேயே 1 கிலோ தங்க கட்டி மற்றும் ரூ.15 லட்சம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை சவுகார்பேட்டை பெரிய நெய்காரன் தெருவைச் சேர்ந்தவர் யோகேஷ் ஜெயின் (வயது 35). இவர், அதே பகுதியில் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது உடன் பிறந்த தம்பியான வினோத் ஜெயின் (30) என்பவர் இவரது நகை கடையில் வேலை செய்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு யோகேஷ் ஜெயின் கடையில் கணக்கு பார்க்கும்போது 1 கிலோ தங்க கட்டிகள், ரூ.15 லட்சம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி யானைக்கவுனி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் அவருடைய தம்பியான வினோத் ஜெயின்தான் அதனை திருடியது தெரிந்தது. அண்ணன் யோகேஷ் ஜெயின் ஊரில் இல்லாதபோது தனது தாயாரிடம் இருந்து நகை கடையின் சாவியை வாங்கி கடையை திறந்து லாக்கரில் இருந்த தங்க கட்டி மற்றும் பணத்தை திருடியது தெரிந்தது. வினோத் ஜெயினை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1 கிலோ தங்க கட்டிகள், ரூ.1½ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story