கணவரை கட்டையால் அடித்துக்கொன்ற பெண்..!


கணவரை கட்டையால் அடித்துக்கொன்ற பெண்..!
x
தினத்தந்தி 17 Jun 2023 6:45 PM GMT (Updated: 18 Jun 2023 8:10 AM GMT)

நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவரை அவரது மனைவியே கட்டையால் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவரை அவரது மனைவியே கட்டையால் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவலாளி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள காப்பாரப்பட்டியை சேர்ந்தவர் நரியழகன் (வயது 52). இவர் தோட்டத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணம் ஆகி விட்டது. ஒரு மகள் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். 4-வது மகள் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நரியழகன் தனது மனைவி செல்லம்மாள் நடத்தையில் சந்தேகப்பட்டதால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நரியழகன் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்குவந்து, கட்டிலில் படுத்து தூங்கி உள்ளார்.

நேற்று காலை பார்த்த போது கட்டிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.

கைது

அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தகவல் அறிந்து துணை சூப்பிரண்டு ஆத்மநாதனும் விரைந்து வந்தார்.

விசாரணையில் சம்பந்தப்பட்ட இடத்தில் நரியழகன் மனைவி செல்லம்மாள் இல்லாததை அறிந்து போலீசார் சந்தேகம் அடைந்தனர். செல்லம்மாளின் செல்போன் சிக்னலை கொண்டு அவரை மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி பகுதியில் சிங்கம்புணரி போலீசார் தேடினர். நேற்று பிற்பகலில் கொட்டாம்பட்டி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த செல்லம்மாளை போலீசார் கைது செய்தனர்.

அடித்துக்கொலை

விசாரணையில் நடத்தையில் சந்தேகப்பட்டதால் அடிக்கடி எனக்கும், என் கணவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் வீட்டில் கட்டிலில் படுத்திருந்த நரியழகனை, கருவேலமரக்கட்டையால் தலையில் ஓங்கி தாக்கியதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் இறந்தார். பின்னர் அங்கிருந்து நான் தப்பி ஓடி வந்துவிட்டேன் என செல்லம்மாள் போலீசாரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் சிங்கம்புணரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story