மின்கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் ரூ.9 லட்சம் 'அபேஸ்' - போலீஸ் நடவடிக்கையால் மீட்பு


மின்கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் ரூ.9 லட்சம் அபேஸ் - போலீஸ் நடவடிக்கையால் மீட்பு
x

மின்கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி வங்கி கணக்கில் இருந்து நூதனமுறையில் திருடப்பட்ட ரூ.8 லட்சத்து 88 ஆயிரத்தை போலீஸ் நடவடிக்கையால் மீட்கப்பட்டு மீண்டும் பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கில் சேர்த்தனர்.

சென்னை

சென்னை முகப்பேரை சேர்ந்தவர் ரோமி பைநாடன் (வயது 52). இவர், திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்து இருந்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

எனது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், "நீங்கள் மின்சார கட்டணம் செலுத்தவில்லை. மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின் இணைப்பை துண்டிக்காமல் இருக்க இந்த செல்போனில் தொடர்பு கொள்ளவும்" என்று ஒரு செல்போன் எண்ணும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ரோமி பைநாடன், அந்த செல்போன் எண்ணில் தொடர்புகொண்டபோது, மறுமுனையில் பேசியவர் தன்னை மின்வாரிய அதிகாரி என்றும், பணம் செலுத்த உதவுவதாகவும் கூறி "டீம் வியூவர்" என்ற செயலியை பதிவிறக்கம் செய்யும்படி அறிவுறுத்தினார்.

அதன்படி செல்போனில் அந்த செயலியை பதிவிறக்கம் செய்ததும், எனது செல்போன் கட்டுப்பாட்டை அந்த நபர் எடுத்து கொண்டு எனது வங்கி கணக்கில் இருந்து 3 தவணையாக மொத்தம் ரூ.8 லட்சத்து 88 ஆயிரத்தை எடுத்து கொண்டார்.

இந்த நூதன மோசடியில் ஈடுபட்டவர் மீது நடிவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இது குறித்து அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தபோது அன்றைய தினமே புகார்தாரர் வங்கி கணக்கில் இருந்து மர்மநபர்கள் பணத்தை திருடியதும், அந்த பணத்தை மர்மநபர்களின் வங்கி கணக்குக்கு பரிமாற்றம் செய்யாமல் நிறுத்தி வைக்குமாறும் வங்கி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

மேலும் சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து கண்காணித்து, வங்கிக்கு நினைவூட்டல் கடிதங்கள் மற்றும் நோட்டீஸ்களை வழங்கி வந்தனர். அதன்படி வங்கி நிர்வாகம் புகார்தாரரின் ரூ.8 லட்சத்து 88 ஆயிரத்தை திரும்ப பெற்று, அவரது வங்கி கணக்கில் மீண்டும் வரவு வைத்தனர்.

பணத்தை மீட்ட அண்ணாநகர் காவல் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெகுவாக பாராட்டினார். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இது போன்ற சம்பவத்தில் ஈடுபடுவது தெரிந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் '1930' மூலம் புகார் தெரிவிக்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story