வெல்டிங் வைத்தபோது விபத்து; டேங்கர் லாரி வெடித்து வடமாநில தொழிலாளி பலி - மற்றொருவர் படுகாயம்


வெல்டிங் வைத்தபோது விபத்து; டேங்கர் லாரி வெடித்து வடமாநில தொழிலாளி பலி - மற்றொருவர் படுகாயம்
x

வெல்டிங் வைத்தபோது டேங்கர் லாரி வெடித்ததில் வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

கோவை மாவட்டம் போத்தனூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தனக்கு சொந்தமான டேங்கர் லாரியை பழுது பார்த்து தண்ணீர் லாரியாக மாற்ற முடிவு செய்தார். இதையடுத்து அவர் கோவை மலுமிச்சம்பட்டி போடிபாளையம் ரோட்டில் உள்ள ஒர்க் ஷாப்பில் தனது டேங்கர் லாரியை கொண்டு சென்றார்.

அந்த டேங்கர் லாரியானது பர்னஸ் ஆயிலை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. நேற்று காலை இந்த டேங்கர் லாரியின் மேற்புறம் உள்ள மூடியை வெல்டிங் ஊழியர்கள் திறக்க முயன்றனர். ஆனால் கடுமையாக முயற்சி செய்தும் டேங்கரின் மூடியை திறக்க முடியவில்லை. இதையடுத்து அந்த மூடியை வெல்டிங் மூலம் அகற்ற முடிவு செய்தனர்.

இதையடுத்து அந்த ஒர்க் ஷாப்பில் பணிபுரியும் உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்சி மாவட்டத்தை சேர்ந்த ஒகில் (வயது 38), ரவி (19) ஆகியோர் வெல்டிங் கருவிகளுடன் சென்றனர். இதில் ஒகில் டேங்கர் லாரியின் மேலே ஏறி வெல்டிங் மூலம் மூடியை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அவருக்கு உதவியாக ரவி டேங்கர் லாரியின் அருகே கீழே நின்று கொண்டிருந்தார்.

ஒகில் டேங்கர் லாரி மூடியில் வெல்டிங் வைத்த சிறிது நேரத்தில் லாரியானது பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் ஒகில் தூக்கி வீசப்பட்டார். உடல் முழுவதும் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். லாரிக்கு அருகில் நின்று கொண்டிருந்த ரவி படுகாயமடைந்தார்.

லாரி வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரவியை மீட்டு கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினர் டேங்கர் லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தில் டேங்கர் லாரி உருக்குலைந்தது. இந்த விபத்து குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பர்னஸ் ஆயில் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வந்ததால் டேங்கர் லாரிக்குள் கியாஸ் உருவாகி இருந்துள்ளது. பொதுவாக இதுபோன்ற டேங்கர் லாரிகளை பழுது பார்ப்பதற்கு முன், லாரியின் மூடியை ஊழியர்கள் திறந்து விடுவார்கள். அப்போது டேங்கருக்குள் இருக்கும் கியாஸ் வெளியேறி காற்றுடன் கலந்து விடும். ஆனால் இந்த டேங்கர் லாரியில் மூடியை திறக்க முடியாததால் வெல்டிங் மூலம் மூடியை அகற்ற முயன்றனர். அப்போது தீப்பொறிகள் பட்டு சிதறியதால் டேங்கரில் இருந்த கியாஸ் பற்றி எரிந்து வெடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story