கொலை வழக்கில் பொய் சாட்சி தயாரித்த டி.எஸ்.பி. மற்றும் வி.ஏ.ஓ. மீது நடவடிக்கை - கோர்ட்டு உத்தரவு


கொலை வழக்கில் பொய் சாட்சி தயாரித்த டி.எஸ்.பி. மற்றும் வி.ஏ.ஓ. மீது நடவடிக்கை - கோர்ட்டு உத்தரவு
x

கொலை வழக்கில் பொய் சாட்சி தயாரித்த டி.எஸ்.பி. மற்றும் வி.ஏ.ஓ. மீது குற்றவியல், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த அப்போனியன் ராஜ் என்பவர் தனது மனைவி மோட்ஷா ஆனந்த மேரி என்பவரைக் குடி போதையில் அடித்துக் கொலை செய்ததாக கோயம்பேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யட்டார்.

கடந்த 2017-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு கோர்ட்டு நீதிபதி முகமது பரூக் விசாரித்தார். அப்போது சாட்சியக்களின் அடிப்படையில், மோட்ஷா ஆனந்த மேரியை கொலை செய்ய அப்போனியன் ராஜ் எந்த ஆயுதங்களையும் பயன்படுத்தவில்லை என்பதும், குடிபோதையில் ஏற்பட்ட தகராற்றில் தான் மனைவியைத் தாக்கியுள்ளார் என்பதும் திட்டமிட்டு கொலை செய்யவில்லை தெளிவாகிறது எனக் கூறிய நீதிபதி கொலை செய்யும் உள்நோக்கமின்றி மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் அப்போனியன் ராஜுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

தொடர்ந்து கண்பார்வைக் குறையுடன் உள்ள மேரியின் மகனுக்கு இழப்பீடு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பு சாட்சியாக நெற்குன்றம் வி.ஏ.ஓ. ஜனார்த்தனன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதில் காவல் நிலையத்தில் வைத்து குற்றம் சாட்டப்பட்டவரின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்று, அதை தனது அலுவலகத்தில் பெற்றதாகக் காவல் துறைக்கு அறிக்கை அளித்ததாகக் கூறியுள்ளார். மேலும் புலன் விசாரணை அதிகாரி கேட்டுக் கொண்டதால் அதுபோல் அறிக்கை அளித்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து பொய்ச் சாட்சியம் தயாரித்ததாக வழக்கைப் புலன் விசாரணை செய்த தற்போது சென்னை அசோக் நகரில் உள்ள சைபர் குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளராக உள்ள அழகு மற்றும் மதுரவாயல் வி.ஏ.ஓ. ஜனார்த்தனன் ஆகியோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கவும் நீதிபதி முகமது பாரூக் உத்தரவிட்டுள்ளார்.




Next Story