45 மீனவர்கள், 138 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


45 மீனவர்கள், 138 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 14 Dec 2023 8:27 AM GMT (Updated: 14 Dec 2023 8:35 AM GMT)

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

இலங்கைக் கடற்படையினரால் 13-12-2023 அன்று 6 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14-12-2023) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள். IND-TN-08-MM-26 என்ற பதிவு எண் கொண்ட இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது சம்பவம் என கவலைபடத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை மீறும் வகையில் இதுபோன்று கைது நடவடிக்கையில் ஈடுபடுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் வாழ்வில் பெருத்த அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர், இந்த ஆறு மீனவர்கள் தவிர்த்து, ஏற்கெனவே 39 மீனவர்களும், 137 படகுகளும் இலங்கைவசம் காவலில் உள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி இதில் உடனடியாகத் தலையிட்டு, இலங்கை வசமுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திடத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்-அமைச்சர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story