குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி


குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 26 Aug 2023 11:00 PM GMT (Updated: 26 Aug 2023 11:00 PM GMT)

குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடும் பாதிப்பு

ஒவ்வொரு ஆண்டும் குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 முதல் செப்டம்பர் 15-ந் தேதி வரை சுமார் 5.25 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 125 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந் தேதி 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, அன்றே மாலைக்குள் படிப்படியாக 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டு, ஆகஸ்டு மாதத்தில் 18 ஆயிரம் கனஅடியாக நீர் தேவைக்கேற்ப, மழையின் அளவுக்கேற்ப வழங்கப்பட வேண்டும்.

ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வெறும் 10 ஆயிரம் கன அடி தான். இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில், ஆற்றங்கரை ஓரம் உள்ள பாசனப் பரப்புகள் மற்றும் சில தண்ணீர் திறந்துவிடப்பட்ட கால்வாய்களின் ஓரங்களில் உள்ள பாசனப் பரப்புகள் தவிர, மற்ற இடங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளக்க வேண்டும்

குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தொகுதி, தலைஞாயிறு ஒன்றியத்தில் மட்டும் குறுவை சாகுபடி செய்து, போதிய தண்ணீர் இல்லாமல் பண்ணைத் தெரு, மாராச்சேரி, ஆய்மூர், வடுகூர், திருவிடமருதூர், நீர்மூலை, சித்தாய்மூர், கச்சநகரம், பனங்காடி, பாங்கல், கொளப்பாடு, கொத்தாங்குடி, நத்தப்பள்ளம், மணக்குடி, காடந்தேத்தி, வாட்டக்குடி, உம்பளச்சேரி, துளசாபுரம் ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் காய்ந்து கருகி காட்சி அளிக்கின்றன.

ஒரு ஒன்றியத்தில் மட்டும் இத்தனை கிராமங்கள் என்றால், மற்ற டெல்டா மாவட்டங்களின் பாதிப்பு என்ன என்பது அனைவருக்கும் நன்கு விளங்கும். பாட்னா மற்றும் பெங்களூரு சென்று காங்கிரஸ் கட்சியுடன் கைகுலுக்கும் தி.மு.க., தனது கூட்டாளியான கர்நாடக காங்கிரசிடம், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் திறந்து விட வற்புறுத்தாமல் இருப்பதன் காரணத்தை பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளிடம் விளக்க வேண்டும்.

நிவாரண நிதி

வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டு சாதனை படைத்துவிட்டோம் என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த தி.மு.க. அரசு, கடந்த 2 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்யாமல் விவசாயிகளுக்கு பெரும் துரோகத்தை இழைத்துள்ளது. எனவே, இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

சம்பா மற்றும் தாளடி தொகுப்புத் திட்டத்தை அறிவித்து தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். தொடர்ந்து மெத்தனப் போக்கோடு செயல்பட்டால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைக் காக்க மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story