அதிமுக-பாஜக கூட்டணி முறிவு; டிரெண்டாகும் 'நன்றி மீண்டும் வராதீர்கள்' ஹேஷ்டேக்
அதிமுக தனது டுவிட்டர் பக்கத்தில் 'நன்றி மீண்டும் வராதீர்கள்' என்ற ஹேஷ்டேக் மூலம் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நிலையில் அதிமுக-பாஜக கூட்டணியில் பனிப்போர் நிலவி வந்தது. அண்ணாவை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் அதிமுக-பாஜக இடையே வார்த்தை யுத்தம் அரசியல் களத்தை பரபரப்பாக்கியது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. விரிவான விவாதத்திற்குப் பிறகு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் இருந்தும் விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் எனவும் அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது. #நன்றி_மீண்டும்வராதீர்கள்" என தெரிவித்துள்ளது.
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிலையில் மீண்டும் கூட்டணிக்கு வரவேண்டாம் என பாஜகவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் 'நன்றி மீண்டும் வராதீர்கள்'என்ற ஹேஷ்டேக்கை அதிமுக பதிவிட்டுள்ளது. அதனை அதிமுக தொண்டர்கள் ரீடுவிட் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள், இது சம்பந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டும் வருகின்றனர். அவைகள் அனைத்தும் வைரலாக பரவி வருகின்றன. கூடவே அவர்கள் ஹேஷ்டேக் பகுதியில் 'நன்றி மீண்டும் வராதீர்கள்' என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு 16,000-க்கும் மேற்பட்ட டுவிட் பதிவுகள் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளன. இதன்மூலம் டிரெண்டிங்கிலும் 'நன்றி மீண்டும் வராதீர்கள்' ஹேஷ்டேக் இடம் பிடித்துள்ளது. மேலும் அரசியல் டிரெண்டிங் பகுதியில் நம்பர் 1 இடத்தையும் பெற்றுள்ளது.