அ.தி.மு.க.-பா.ஜ.க. பிரிவை நிரந்தரமாக பார்க்கிறேன்
அ.தி.மு.க.-பா.ஜ.க. பிரிவை நிரந்தரமாக பார்க்கிறேன் என சீமான் கூறினார்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. பிரிவை நிரந்தரமாக பார்க்கிறேன் என சீமான் கூறினார்.
பேட்டி
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் ஏற்பட்டுள்ளது விரிசல் அல்ல. அதை முறிவாக பார்க்கிறேன். அதை தற்காலிக பிரிவாக பார்க்கவில்லை. நிரந்தர பிரிவாகவே பார்க்கிறேன். பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என அ.தி.மு.க. விலகி சென்றது குறித்து பா.ஜ.க. தலைமை பதில் அளிக்கும் என அண்ணாமலை கூறியிருக்கிறார்.
அப்படியென்றால் தினமும் தலைமையை கேட்டுத்தான் பேசினாரா?. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என அ.தி.மு.க.வினரே சொல்லிவிட்டதால் பா.ஜ.க. தலைமை என்ன முடிவு எடுத்தால் நமக்கு என்ன?.
ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள்
சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. வயல்கள் வறண்டு காணப்படுகிறது. விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இந்தநிலை தொடர்ந்து நீடித்து வந்தாலும் அவர்களுக்கு(தி.மு.க.) தானே மீண்டும் வலிமையை கொடுக்கிறீர்கள். எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுத்து பாருங்கள்.
தமிழனாக பிறப்பவர் எல்லாம் தமிழர் இல்லை. தமிழுக்கும், தமிழருக்கும் இறுதிவரை துணையாக இருப்பவர் தான் தமிழர். தமிழரான ப.சிதம்பரம் நினைத்திருந்தால் ஈழப்படுகொலையை தடுத்து இருக்கலாம். தமிழர் மீட்சியே தமிழர் எழுச்சி என்ற கோட்பாட்டை எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா?
முதல்-அமைச்சர் அவமதிப்பு
கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டத்தின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கர்நாடக அமைப்பினர் கேலி செய்கிறார்கள். உங்களுக்கு (மு.க.ஸ்டாலின்) கோபம் வருகிறதோ? இல்லையோ? எங்களுக்கு கோபம் வருகிறது.
உங்களுடன் கருத்து, கொள்கை வேறுபாடு இருக்கலாம். ஆனால் என் இனத்தின் முதல்-அமைச்சரை அவமதிப்பது எங்களது தன்மானத்திற்கு இழுக்காக இருக்கிறது. கர்நாடக அமைப்புகள் குறைந்தபட்ச மனித மாண்புடன் நடந்து கொள்ள வேண்டும். முதல்-அமைச்சரை கர்நாடக அமைப்புகள் அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தனித்துத்தான் போட்டியிடுவோம். மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசாரம் மேற்கொள்வோம்.
நீட் தேர்வு தோல்வி
மருத்துவ படிப்பில் முதுநிலை படிப்புக்கு மட்டுமல்லாமல், எம்.பி.பி.எஸ். படிப்புக்கும் நீட் தேர்வை ஜீரோவாக ஆக்க வேண்டும். நீட் தேர்வு தோல்வி அடைந்துவிட்டது என்பது மத்திய அரசுக்கு தெரிந்து விட்டது.
நீட் தேர்வு தரமான மருத்துவரை உருவாக்காது என்றும், தரமான மருத்துவரை சாகடிக்கும் என்று தெரிந்த பிறகும் எதற்காக நீட் தேர்வு இருக்கிறது. எனவே நீட் தேர்வை மொத்தமாகவே ஜீரோவாக ஆக்குவது நல்லது.
சாதிவாரி கணக்கெடுப்பு
காங்கிரஸ் கட்சி இந்த நாட்டை மிக அதிகமாக 50 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. அப்போது செய்யாத சாதிவாரி கணக்கெடுப்பை தற்போது ஆட்சிக்கு வந்தால் செய்யப்போவதாக ராகுல் காந்தி கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
சனாதனம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்குவதற்காக ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி தேவைப்படும். இந்த நிதியை மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மூலமாகத்தான் வசூல் செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.