அ.தி.மு.க. தலைவர்களை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்க பா.ஜ.க. வெட்கப்பட வேண்டும் - ஜெயக்குமார் கண்டனம்

அ.தி.மு.க. கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்போம் என்று ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பிறந்தநாள் விழாக்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வருடம் முழுவதும் கொண்டாடும் இயக்கம் அ.தி.மு.க. தான். அதனால் தான் 50 ஆண்டுகள் கடந்தும் அ.தி.மு.க. உயிர்ப்புடன் உள்ளது
புதுச்சேரியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் வைக்கப்பட்டுள்ள பா.ஜ.க பேனர்கள் குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் அளித்த பதில், "இதற்குப் புதுச்சேரி அ.தி.மு.க. பிரிவு சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பா.ஜ.க. பயன்படுத்த வெட்கப்பட வேண்டும். எதற்காக இப்படி எங்கள் தலைவர்கள் படங்களைப் பயன்படுத்துகிறீர்கள்.
அ.தி.மு.க. தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி, பா.ஜ.க. வாக்கு பெற நினைப்பது கீழ்த்தரமானது. தங்கள் தலைவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என இதன்மூலம் தெரிகிறது. கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முகங்களைக் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றால் அது நடக்காது. அந்த இரண்டு முகங்களும் அ.தி.மு.க.வுக்கு மட்டுமே சொந்தமானது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு எந்தவொரு ஆதரவும் இல்லை. தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே மறைமுக கூட்டு இருக்கிறது. பிரதமர் மோடி தமிழகம் வருவதால் ஒன்னும் நடக்காது. நாங்கள் யாரை நம்பியும் இல்லை. எங்களுக்கென தனித்தன்மை இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்போம். வராவிட்டால் கவலை இல்லை. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். இவ்வாறு அவர் கூறினார்.