தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டையில் தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் நேற்று தமிழகத்தில் விலைவாசி உயர்வு, சாராய விற்பனையால் ஏற்படும் மரணங்கள், அமைச்சர் செந்தில்பாலாஜியை தகுதிநீக்கம் செய்ய தவறிய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் விலைவாசி உயர்வு, சாராய விற்பனையால் மரணங்கள், கொலை, கொள்ளை போன்ற குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தி.மு.க. அரசு தவறிவிட்டதாக கூறினார். மேலும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்தி மானபங்கப்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று 10 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாகவும், போலி மதுக்கூடங்கள் நடத்தியதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
காப்பாற்ற முயற்சி
இது தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்க துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக தி.மு.க. அரசு பொய் குற்றச்சாட்டுகளை கூறி அமைச்சர் செந்தில்பாலாஜியை காப்பாற்ற முயற்சிக்கிறது. வருமான வரித்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதற்கு, மத்திய அரசு 356-வது பிரிவை பயன்படுத்தி தமிழகத்தில் தி.மு.க. அரசை விரைவில் டிஸ்மிஸ் செய்யலாம். தமிழத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே சட்டமன்ற தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.