அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி 2026 தேர்தலிலும் தொடரும் - பிரேமலதா விஜயகாந்த்
சென்னையில் கடந்த மழை வெள்ளப் பணிகளை தி.மு.க. அரசு சிறப்பாக கையாளவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
திருச்சி,
திருச்சியில் அ.தி.மு.கவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்துகிறார். இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-
அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணி. அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும். உறுதியாக, இறுதியாக என்றைக்கும் எங்கள் கூட்டணி தொடரும். முதல்-அமைச்சராக இருந்த போது, எடப்பாடி பழனிசாமி கொரோனா தொற்று, வெள்ளம் போன்ற சூழ்நிலைகளை சிறப்பாக கையாண்டார்.
சென்னையில் கடந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, தி.மு.க. அரசு அதை சிறப்பாக கையாளவில்லை. நீட் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.கவால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.