அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல்; எடப்பாடி பழனிசாமி இன்றே வேட்புமனு தாக்கல்


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல்; எடப்பாடி பழனிசாமி இன்றே வேட்புமனு தாக்கல்
x

வேட்புமனு தாக்கல் செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணியளவில் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வருகை தர உள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வரும் 26-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை 20-ந்தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை 21-ந்தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்றைய தினமே வேட்ப்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக காலை 10.30 மணியளவில் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

வேட்புமனு தாக்கலுக்கு நாளை மதியம் 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால், எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக நாளை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story