பொள்ளாச்சியில் அ.தி.மு.க. பிரமுகர் கைது


பொள்ளாச்சியில் அ.தி.மு.க. பிரமுகர் கைது
x
தினத்தந்தி 6 Oct 2023 12:45 AM IST (Updated: 6 Oct 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

முதல்- அமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக பொள்ளாச்சியில் அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து போலீஸ் நிலையத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்
முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த நகர 18 - வது தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்குமார் பதிவு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஜோதி நகரில் வசிக்கும் தி.மு.க.வை சேர்ந்த ஷானாவாஸ் புகார் கொடுத்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் அருண்குமாரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவதூறு பரப்புதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


இதுகுறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் போலீஸ் நிலையம் முன் திரண்டனர்.

மேலும் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையில் நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜபாண்டியன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ேமலும் இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார்கள். அப்போது பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. அருண்குமாரை விடுவிக்கும் வரை போலீஸ் நிலையத்தில் இருந்து செல்ல மாட்டோம் என்று கூறினார். இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.


இதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறியதாவது:- பொள்ளாச்சி 18- வது தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக அருண்குமார் உள்ளார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் வந்த ஒரு வீடியோவை மறுப்பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பதிவேற்றம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல், அருண்குமார் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.



Next Story