அதிமுக-பாஜக பிரிந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது: சீமான் பேட்டி
அதிமுக- பாஜக கூட்டணி பிரிந்துள்ளதை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பாஜக- அதிமுக பிரிந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;
"பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்துள்ளது மிகிழ்ச்சிக்குரியது. பாஜக-அதிமுக முறிவு என ஜெயக்குமார் தெரிவித்தபோதே அம்முடிவினை வரவேற்று வாழ்த்தினேன்.
தமிழ்நாட்டில் பாஜக, காங்கிரஸ் இரண்டும் வேண்டாம். எந்த மத்திய கட்சிகளுடனும் கூட்டணி கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. என் மொழி, வழிபாடு, உரிமைகளை காக்க தேசிய கட்சிகள் வராது. ஒரு தொங்கு சதை போல பாஜகவை தூக்கி சுமக்க வேண்டிய அவசியமில்லை.
தற்போது கூட்டணியில் இருந்து விலகுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதை வரவேற்கிறோம். பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்ததில் உறுதியாக இருக்கவேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.