சென்னையில் இன்று அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம்
அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து வியூகம் வகுக்கப்படுகிறது.
சென்னை,
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழு கூட்டத்தையும், ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்பது விதி ஆகும். அந்த வகையில் அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.35 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்துக்கு அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்குகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நிலையில் அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. மேலும் அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படலாம் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி வெல்ல வேண்டும் என்ற உறுதிமொழி எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட 17-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், இதில் திமுக அரசுக்கு எதிரான கண்டன தீர்மானங்கள் பல இருக்கும் என்றும் அக்கட்சி வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இது ஆகும். எனவே எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அதிமுகவினர் ஏற்பாடு செய்து உள்ளனர்.